ஜெனீவா பிரச்சினை என்பது ‘மாய மான்’.. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தீர்வு என்பதே ‘நிஜ மான்’. எனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் எமது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏதுவான நிலையான தீர்வை எட்டுவதற்கு பங்களிப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினருக்கும் எமது மக்கள் சார்பாக மனிதாபிமான அழைப்பினை விடுக்கிறேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் விரைவில் எமது அரசு வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்தும். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடட்டும். மக்கள் அப்போது தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள்.
காலத்தை இழுத்தடித்து தமது சுயலாப அரசியலுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் மேல் ஏறி மிதித்து தேர்தல்கள் எரும் போது தேர்தலுக்காக மட்டும் அரசியல் நாடகம் நடாத்தி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாறாக தமிழ் தேர்தல் கூட்டமைப்பு என பெயரை மாற்றிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இனங்களுக்கிடையில் பகைமையை வளர்த்துக் கொண்டு, இன முரண்பாடுகளைத் தூண்டி விட்டுக் கொண்டு, அரசியல் உரிமைப் பிரச்சினைக்கோ அன்றி வேறெந்தப் பிரச்சினைகளுக்கோ ஒரு போதும் தீர்வு கண்டுவிட முடியாது.
தாய்லாந்து, நோர்வே, ஜேர்மனி, ஜப்பான், சுவீஸ் என்று எத்தனையோ நாடுகளுக்குச் சென்று அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, கண்ட மிச்சம் தான் என்ன? இதயசுத்தி இல்லாமல் பிரச்சினைகளுக்கு ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதற்கு இதுவோர் உதாரணம்.
உள்நாட்டிலும் வட்டமேசை மாநாடு, சதுர மேசை மாநாடு என எத்த னையோ பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டும், ஏன் தற்போதைய அரசாங்கத்துடன் கூட ஒரு வருட காலத்திற்கு மேலாக பேச்சுவார் த்தை நடத்தியும் ஐக்கிய இலங் கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும், நடைமுறைக்கு ஏதுவானதுமான அரசியல் தீர்வை உங்களால் எட்ட இயலாமைக்கு காரணம் உங்களிடம் இதயசுத்தி இல்லாமையே.
எமது அரசாங்கம் ஒரு செயற்திட்டத்தை வகுத்து, அதன் வழி செயற்பட்டும் வருகிறது. இச் செயற்திட்டத்தில் அடங்கியுள்ள எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை குறித்த விடயங்களில் பல, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவேவ அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக எஞ்சியுள்ள விடயங்களையும் செயற்படுத்தும்.
அன்று நடைமுறையிலிருந்து வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பல இன்று அகற்றப்பட்டுள்ளன. உதாரணமாக பாதுகாப்பு அனுமதி முறை, பிராயணங்களுக்கானன முன் அனுமதி பெறல், தொழில் செய்வதற்கான பாதுகாப்பு அனுமதி குறிப்பாக, கடற்றொழிலுக்கான அனுமதி, சோதனைச் சாவடிகள், வீதித்தடைகள், வீதி ரோந்துகள், வீதி சோதனைகள், வீட்டுச் சோதனைகள், விடுதி சோதனைகள், ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட வீதிகள், இராணுவப் பதிவு முறைமைகள், இராணுவ அடையாள அட்டை முறைமை போன்றவை இன்று நடைமுறையில் இல்லை.
அன்று இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாடசாலைகள் பல விடுவிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு அவற்றில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த வணக்கஸ்தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் இன்று பொது மக்கள் சுதந்திரமாக சென்று வருகின்றார்கள். உதாரணமாக, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை தீர்த்தக் கேணி, கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், காரைநகர் கசுரினா கடற்கரை, முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில், கிளிநொச்சி கந்தசாமி கோவில், மன்னார் மடு தேவாலயம், திருக்கேதீஸ்வரம் போன்றவற்றை சொல்லலாம்.
யுத்தத்தின் போது சரணடைந்தும், கைது செய்யப்பட்டும் இருந்த பல் லாயிரக்கணக்கான முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று புனர்வாழ் வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர் களிடம் ஒப்படைக்கப்படவில்லையா?
பாவனைக்கு விடுவிக்கப்படாதிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மிதிவெடிகள் அகற்றப்பட்டு விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவில்லையா?
தடை செய்யப்பட்டிருந்த ஏ9 பாதை திறக்கப்படுவதானது யாழ். குடாநாட்டு மக்களின் சொர்க்க வாசலாகக் கருதப்பட்டது. அப்பாதை திறக்கப்பட்டு புனரமைப்புப் பணிகள் இடம்பெறவில்லையா? கடந்த கால அழிவு யுத்தத்தினால் சேதமாகிப் போன வட மாகாணத்திற்கான புகை யிரதப் பாதைகளை மீள அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப் படவில்லையா?
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங் களில் தங்கியிருந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வில்லையா? தமது தேர்தல் வெற்றிக்காக மட்டும் அரசியல் சித்து விளையாட்டு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறிக்குள் எமது மக்கள் தொடர்ந்தும் வீழ்ந்துவிடப் போவதில்லையென்பதை கூட்டமைப்பினர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எமது அரசாங்கம் தனது செயற்திட்டத்திற்கு அமைவாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கும் ஏனைய முழுமையாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று கூறி அதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பங்களிப்புகளை இதயசுத்தியுடன் வழங்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது மக்கள் அரசியல் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்த புதியதொரு மானிட சமூகமாகவும் வாழ்வதற்கு வழி சமைக்கும் சமத்து வமானதொரு ஐக்கிய இலங்கையை நாம் கட்டியெழுப்புவோம்.