4/30/2012

| |

சந்திரகாந்தன் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – வீதி அபிவிருத்தி அமைச்சரின் பிரதி செயலாளர் ஸலாவுதின்

மூவின மக்களுக்காகவும் பாகுபாடின்றி செயற்படும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறு இன்று மண்டூர் தம்பலவத்தை பாடசாலை வீதியை அமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வீதி அபிவிருத்தி அமைச்சரின் பிரதிசெயலாளர் ஸலாவுதின் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்று முதலமைச்சர் யார் என்கின்ற பிரச்சினைகள் இடம்பெற்ற வேளையில் நாம் குழப்பத்துடனேயே இருந்தோம். யார் இந்த பிள்ளையான் என்பது எமக்குத் தெரியாது அவரது குணாதிசயற்கள் தெரியாது. ஆனால் இன்று இவர் முதலமைச்சராக கிடைத்ததையிட்டு பெருமிதமடைகின்றோம்.
இந்த முதலமைச்சரைப்போல் வேறு எவரும் ஒரு முதலமைச்சராக எமக்குக் கிடைக்கமாட்டார்கள். மூவின மக்களையும் சமமாக மதித்து சேவை ஆற்றுகின்றவர்தான் எமது முதலமைச்சர் அவர்கள். இப்பொழுது மாகாணசபை கலைப்பு பற்றிப் பேசப்படுகின்றது அவ்வாறு நடக்குமானால் மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்.
இன்று எமது பிரதேசத்திலே பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றது என்றால் அதற்குக் காரணம் கௌரவ முதலமைச்சர் அவர்கள்தான். கடந்த கால அரசியல் வரலாற்றில் எத்தனையோ தமிழ் அரசியல் தலைமைகள் இருந்தும் அவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கின்றனர். முதலமைச்சர் அவர்கள் என்ன செய்திருக்கின்றார் என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்தகால அரசியல்வாதிகளால் 3 கிலோமீற்றர் பாதையினைக்கூட அமைக்க முடியவில்லை ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று 300 கிலோமீற்றருக்கு மேற்பட்ட வீதிகளை அமைத்திருக்கின்றார்.
முதலமைச்சர் எத்தனையோ வேலைகளைச் செய்தாலும் ஊடகங்கள் அவற்றை வெளியிடுவதில்லை. ஆனால் முதலமைச்சர் பற்றி தவறான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. உண்மைகளை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும். இன்று கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடரவேண்டுமாக இருந்தால் எமது முதலமைச்சரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.