4/28/2012

| |

தந்தை செல்வாவின் சமாதியில் இடம்பெற்றிருக்கக் கூடாத அவமானத்தின் உச்சம் இது.


தந்தை செல்வா அவர்களின் 35 ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வழமைக்கு மாறாக இவ் நினைவுதினத்தில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 30 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய அவரின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு இராசதுரை அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு இராசதுரை அவர்களின் பிரசன்னம் நிகழ்ந்தபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் எழுந்து அவரை திட்டித் தீர்த்திருக்கின்றார். இராசதுரை துரோகி என்று கோபாவேசமாக கூக்குரலிட்டதோடு மட்டுமன்றி அவரை நோக்கி கையில் இருந்தவற்றையெல்லாம் விட்டு வீசி அநாகரிகமான முறையில் நடந்திருக்கின்றார். அதுமட்டுமன்றி அவர் வாயில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் சொல்லும் தரமற்றவை. மட்டக்களப்பான், துரோகி, சக்கிலியா..... என்று ஒரு தெருச்சண்டியனுக்கு நிகராக தரம்தாழ்ந்த முறையில் ஆவேசம்கொண்டு அவர்மீது பாய்ந்துள்ளார். 

இது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல என நாம் கருதுகின்றோம். ஒரு முதுபெரும் அரசியல் தலைவனை அழைத்து அவமதித்திருக்கும் இச்செயற்பாடானது குறித்துசிவாஜிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் இதுவரை கண்டிக்கப்படவில்லை. இது சாதாரண இருவருடைய குடும்பச்சண்டை அல்ல. தந்தை செல்வாவின் சமாதியில் இடம்பெற்றிருக்கக் கூடாத அவமானத்தின் உச்சம் இது. 

வட கிழக்கு இணைந்த தாயகமே எமது உயிர் மூச்சு என்று மூச்சுக்கு மூச்சு சொல்லும் அனைவருக்குமே இந்நிகழ்வு சமர்ப்பணமாகட்டும். இராசதுரை அவர்கள் ஒரு தனி நபர் அல்ல. தமிழர் அரசியல் வரலாற்றில் அவர் ஓர் சரித்திரம். கிழக்குமாகாணத்தின் தந்தையாக இன்றுவரை மதிக்கப்படுபவர். அவரது செயற்பாடுகள் தமிழர் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் அபரிதமானவை. அதன் எதிர்வினையே அவர் மீது யாழ்ப்பாணத் தலைவர்கள் கொண்டிருக்கும் என்றுமே மங்காத காழ்ப்புணர்வின் அடிநாதமாகும். அந்தவகையில் இராசதுரை அவர்களுக்கு நடந்த இந்த அவமதிப்பானது கிழக்கு மாகாணமக்கள் ஒவ்வொருவருக்குமான அவமதிப்பாகும். இந்த அவமதிப்பு கிழக்கு வடக்கு அரசியல் கொண்டிக்கும் அகமுரண்பாடுகளின் வெளிப்பாடாக இடம்பெற்றிருக்கின்றது. அந்த வகையில் இந்த நிகழ்வும் இதன் தொடர்வினைகளும் எதிர்கால இலங்கை தமிழர்களின் அரசியலில் நிகழ்த்தப்படப்போகும் பாதிப்புகள் மிக அதிகளவாகவே இருக்கும்.


கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. யான சிவாஜிங்கம் அவர்கள் ரெலோ அமைப்பின் தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் குரலை சர்வதேசத் தரத்தில் ஒலிக்கச் செய்கிறேன் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் கூட. இப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த தலைமைப்பீடங்களை நிரப்புகின்ற இவர்களது மெய்யும் மனமும் எவ்வளவு தூரம் அசுத்தங்களால் நிறைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அம்பலப்படுத்தியிருக்கின்றது மேற்படி நிகழ்வு. தனது உரிமை பற்றிப்பேசுகின்ற மட்டக்களப்பான் துரோகி என்று சுட்டுவிரல் நீட்டுகின்ற யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் முழு வடிவமாக பிரபாகரனுக்கு பின்னர் சிவாஜிலிங்கம் விசுவரூபம் எடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி ஒரு தலித் சமூகத்தின் பெயரைச் சொல்லி வைதல் என்பது அப்பட்டமான யாழ்மேலாதிக்க வேளாள பாரம்பரியத்தின் கைவிடமுடியாத வெளிப்பாடாகும். இந்த கேவலமான ஆதிக்க குணாம்சங்களே தமிழ் தேசியவாதிகளின் அடிப்படைத் தராதரமாக இருக்கவேண்டும் என்பதை சிவாஜிலிங்கம் மென்மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இவர்களா எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தை அலங்கரிப்பவர்கள்? இவர்களா எமக்கு தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை என்று போதனை செய்பவர்கள்? இவர்கள் தலைமையிலா தமிழர்களுக்கு விடுதலையும் தீர்வும் கிடைக்கப்போகின்றது? என்று பல்லாயிரம் கேள்விகளுடன் ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு இது. இராசதுரை அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அவமதிப்ப்பினை யார் யாரெல்லாம் எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப் போகின்றார்கள், இதை யார் யாரெல்லாம் அமைதிகாத்து ஆதரிக்கப்போகின்றார்கள் என்பதை காலம் பதிவு செய்யக்காத்திருக்கின்றது. இதில் மௌனம் கலைத்து முதற்கையெடுக்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு நினைவுதின நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் முக்கிய பங்குவகித்த தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசனுக்கு உண்டு என்பதை பிரசித்தம் செய்யவேண்டியது எங்கள் கடமையெனக் கருதுகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.
27-04-2012