4/26/2012

| |

தம்புள்ளை பள்ளிவாசலும் கோயிலும் புனித பூமிக்கு வெளியே உள்ளன


தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
தம்புள்ள புனித பூமி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 3 மாதகாலத்தினுள் தம்புள்ள புனித பூமி திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
30 வருட யுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகையிலே இவ்வாறு இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுத்தும் வகையில் தேவையின்றி தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளது. இது காலவரையும் இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தம்புள்ள புனித பூமி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருந்தது. பிரேமதாஸ நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது தம்புள்ள நகருக்கு அப்பால் வரையான பகுதி புனித பூமியாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் பல வருடங்களாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
1994 ல் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான பின் புனித பூமி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால் மக்கள் தமது வீடுகளை உடைப்பதை விரும்பவில்லை. இதனால் மக்களுக்கு பாதிப்பின்றி புனித பூமி திட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறுதியாக நகர அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தன இருந்தபோதும் இதில் திருத்தம் செய்யப்பட்டது.
தம்புள்ள புனிதபூமி அமைப்பதற்கான பணிகள் 70 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 23 ஆம் திகதி புத்தசாசன மதவிவகார அமைச்சின் செயலாளர், மகா சங்கத்தினர், அடங்கலான சகல தரப்பினருடனும் பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையிலே ஒரு தரப்பினர் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாகச் சென்று குழப்பம் ஏற்படுத்தினர். பேச்சுவார்த்தை மூலம் இலகுவாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினை பூதாகாரமாக்கப்பட்டு சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இங்கு இருக்கிறது. இதற்கான காணியை நானே முஸ்லிம்களுக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது முற்றிலும் தவறாகும். 3 முஸ்லிம்களின் பெயரிலே இந்தக் காணி உள்ளது 1992.2.28 ஆம் திகதி வர்த்தமானியில் இது தொடர்பான விபரம் உள்ளது.
தம்புள்ள புனித பூமி திட்டத்தை 6 மாதங்களில் முழுமையாக செயற்படுத்துவதாக பெளத்த விவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சின் செயலாளர், தம்புள்ள நகர சபை தலைவர் அடங்கலான சகல தரப்பினருடனும் நான் பேச்சு நடத்தினேன். இந்த திட்டத்தை மூன்று மாதத்தினுள் முழுமையாக அமுல்படுத்துமாறு கேட்டுள்ளோம். இதன் மூலம் சகலரும் கெளரவமாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்தும் இத்தகைய முயற்சிகள் குறித்து கவலை அடைகிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சகல மக்கள் குறித்தே நான் சிந்தித்து செற்படுகிறேன். என்னை பெளத்த விரோதியாக காட்ட சிலர் முயல்கின்றனர்.
என்னைப் பற்றி பொய் பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன். 20 ஆம் திகதி நடந்த சம்பவத்தை பொலிஸார் கட்டுப்படுத்தியிருக்க முடியும். யாராக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். 20 ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தம்புள்ள பகுதி சிங்கள மக்கள் 100 பேர் கூட பங்குபற்றவில்லை. வெளியில் இருந்து பஸ்ஸில் அழைத்து வரப்பட்டவர்களே அதிகம் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கொரியா செல்ல முன்னர் ஜனாதிபதி கூறினார். இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வாய்ப்புள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இதற்கு துரிதமான தீர்வு ஒன்றை வழங்குவார் என நம்புகிறேன் என்றார்.