4/23/2012

| |

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் வருடாந்த கொடியேற்றம் இன்று

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 190 ஆவது வருடாந்த கொடியேற்ற விழா இன்று ஆரம்பமாவதையிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நகரத்திற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இதைவிட அப்பிரதேசங்களில் ஏதாவது ஒரு பிரதான வரலாற்றுச் சான்றும் காணப்படும்.
இவ்வாறுதான் கல்முனை மாநகரத்திற்கும் அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்களுக்கும் மிக நீண்ட சுவாரசியமான வரலாறுகள் நிறைந்து காணப்படுகின்றன.
கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் கல்முனை மாநகர சபை மக்கள் பெற்ற ஒரு வரலாற்றுச் சான்றாகும்.
கல்முனை மாநகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் வங்கக் கடலோரம் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளதினால் இதனை எல்லோரும் கடற்கரைப் பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர்.
இப்பள்ளி வாசலுக்கு வரலாற்று ரீதியாக சிறப்புச் சேர்ப்பதுதான் இப்பள்ளி வாசலில் வருடா வருடம் நடாத்தப்படும் கொடியேற்ற விழாவாகும்.
வருடா வருடம் ஜமாதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழாவானது சங்கை மிகு சாகுல்ஹமீது ஒலியுல்லாவின் வருடாந்த நினைவு வைபவமாகும். வழமைபோல் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் இப்பள்ளிவாசலின் 190 வது வருடாந்த கொடியேற்ற விழா ஆரம்பமாகின்றது.
இந்நாளில் தான் இருளகற்றி ஒலியூட்ட வந்த நபி பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்களின் 23வது தலைமுறையில் செய்யது ஹசன் குத்தூஸ் செய்யது பாத்திமா தம்பதிகளுக்கு மகனாக ரபியுல் அவ்வல் மாதம் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மனிக்கபூர் என்னும் ஊரில் பிறந்தவர்தான் சங்கைமிகு சாகுல் ஹமீது ஒலியுல்லா அவர்கள்.
இஸ்லாத்தின் ஞான விளக்கை பரந்த உலகின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச்சென்று இருளகற்றி ஒலிபெறச் செய்த பெருமை பல மகான்களையே சாரும். தன்நலம் மறந்து மக்களுக்கு அறிவூட்டி தொண்டுசெய்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஊண் அற்று உற்றார், உறவினரை வெறுத்து இறைவனது வழி நடந்து எல்லா உலகத்தையும் இன்ப வாழ்க்கையில் ஆழ்த்த நினைத்து இறைதொண்டாற்றிய ஒரு பெரும் மகானே சங்கை மிகு சாகுல் ஹமீது ஒலியுல்லா.
அப்பெரு மகானின் நினைவுச் சின்னம் அவர்கள் இறந்து பல ஆண்டுகள் சென்ற பின்னரும் அவர் செய்த இறைத் தொண்டின் பலனாக பூத்துக் காய்த்து கனிந்து வருகின்றது. அவர்களின் வாழ்க்கை உலக மக்களுக்கு மிக உன்னதமான படிப்பினையும் முன்மாதிரியுமாகும்.
வேண்டிரை வீசும் வீயன் நாகூர் அண்ணல் சாகுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் மனித சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. மானிக்கபூரில் பிறந்து கொஞ்சம் அரபு மொழி வல்லுனராய் தந்தை தாயைத் துறந்து ஞான வழி நடக்க விளைந்து ஆண்டவனின் பாதையில் இறங்கி பிறந்தகம் விட்டு வெளியேறிச் சென்று பெரும் அற்புதங்கள் செய்த பெருமனாரின் சரிதையை நினைக்க நினைக்க உள்ளம் உருகுகின்றது.
தனது எட்டாவது வயதிலேயே குர்ஆன் ஓதி முடித்தார். அதன்பின்பு தமது இளம் வயதில் இஸ்லாமிய நற்பணி நோக்கோடு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். இவர்களின் ஆன்மீக சுற்றுலாவின் ஒரு பகுதியாக எமது நாட்டிற்கும் வந்து தப்தர் ஜெய்லானி எனும் இடத்தை அடைந்தார்.
இலங்கையின் தென்பகுதி கரையை அடைந்தார். அவர்கள் புனித ஸ்தலங்களில் ஒன்றாகிய நபி ஆதம் (அலை) அவர்களின் பாதம் பட்ட இடத்தினையும் தரிசித்து விட்டு தொடர்ந்தும் கரையோரப் பகுதியாக தென்கிழக்கு நோக்கி வந்தார். அந்த சமயத்தில் கல்முனைக் குடியில் வசித்தவர்கள் தான் மர்ஹ¥ம் முகம்மது தம்பிலெப்பை. இவர்கள் மார்க்கத்திலும், கல்வி ஞானத்திலும் ஈடுபாட்டுடன் செயல்பட்டார். உயர் பண்பு ஒழுக்கச் சீடராக வாழ்ந்து வந்த இவர் இக் காலப் பகுதியில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
கடும் நோயினால் அவஸ்தைப்பட்ட இவர்கள் கடலில் நீராடவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் கல்முனைக்குடி, கடற்கரையோரம் ஒரு குடிசையை அமைத்து வாழ்ந்து வந்தார். இவர்கள் கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்த போதிலும் தமது அன்றாட மார்க்கக் கடமையை செய்து வரத் தவறவில்லை.
கால ஓட்டத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தமது இரவுத் தொழுகையின் பின் அயர்ந்து தூங்கிவிட்ட முகம்மதுத் தம்பிலெவ்வையின் கனவில் ஒரு வாட்ட சாட்டமான மனிதர் பூரண சந்திரனை ஒத்த முகத்துடன் தலையில் பச்சை நிறத் தலைப்பாகையுடன் தோன்றி உமது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மணல் குவித்து வைத்திருக்கின்றேன்.
நீர் அவ்விடம் சென்று அடையாளம் இருக்கும் இடத்தில் எனது நினைவாக ஒரு இல்லம் அமைத்து விடும். இன்றுடன் உம்மைப் பிடித்துள்ள நோயும் அகன்று விடும் என் பெயர் சாகுல் ஹமீத் என்று கூறி மறைந்து விட்டார். கண் விழித்து பார்த்தபோது பொழுது புலர்ந்து இருந்தது.
அவர்களின் உடலில் இருந்த நோய் முற்றாக குணமாகி இருந்ததோடு நோய் இருந்தமைக்கான எவ்வித அடையாளமும் இருக்கவில்லை. உடனேயே இறைவனைப் புகழ்ந்துவர்களாக குறிப்பிட்ட மண் குவியலைத் தேடி கண்ணுற்று அருகிலிருந்த மரங்களை தறித்து கம்புகளைக் கொண்டு அவ்விடத்தில் பந்தல் அமைத்தார்கள்.
இச் சம்பவங்களை அன்றைய ஜும்ஆத் தொழுகையின் பின் பொது மக்களிடம் கூறினார்கள். பொதுமக்களும் அவ்விடத்து வந்து அடையாளப் பொருட்களை கண்ணுற்றதோடு அவர்களின் நோயும் முற்றாக குணமாகி உள்ளதையும் அவதானித்தனர். இவற்றை எல்லாம் கண்ணுற்ற மக்கள் பந்தலைச் செப்பனிட்டு தர்ஹாவாக மாற்றினர்.
சாஹுல் ஹமீத் ஒலியுல்லா பெயரில் மெளலீது ஓதி குர்ஆன் பாராயணம் செய்ததோடு அவர்களின் பெயரில் அன்னதானமும் வழங்கினர். தொடர்ந்து மக்கள் இத் தர்ஹாவில் கூடத் தொடங்கினர். சங்கைமிகு சாஹுல் ஹமீத் ஒலியுல்லாஹ் பெயரில் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டு தொடர்ந்தும் அவ்விடத்தில் கூடத் தொடங்கினர்.
இதனால் சங்கைமிகு சாஹுல் ஹமீது நாயகம் வபாத்தானார்கள். ஜமாத்துல் ஆகிர் மாதம் தலைப்பிறையுடன் இத் தர்ஹாவில் தொடர்ந்தும் பன்னிரெண்டு நாட்கள் அவர்களின் பெயரில் மெளலீது ஓதப்பட்டு பன்னிரெண்டாம் நாள் மாபெரும் கந்தூரி அன்னதானமும் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வாசலினதும் அதன் கொடியேற்ற விழாவினதும் வரலாறு ஆகும்.
இக்கொடியேற்றக் காலப் பகுதியில் தர்ஹாவில் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மெளலீது மஜ்லிஸ் பக்கீர் ஜமாஅத்தினரின் றாதிபு என்பன சிறப்பாக நடைபெறும். இவ்வாறே இன்று கொடியேற்றப்பட்டு அடுத்து 05.05.2012 ஆம் திகதி அன்று மாபெரும் கந்தூரி அன்னதானத்துடன் இவ்விழா இனிதே நிறைவேறும்.
ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினராவும் மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறிய மினராவும் கம்பீரமாக காட்சி தருகின்றன. இத்துடன் முற்றாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள இத்தர்ஹாவில் மேலும் மூன்று சிறிய மினராக்களும் வானுயர்ந்து கம்பீரமாக காட்சி தருகின்றன. இவற்றிலேதான் வருடா வருடம் கொடியேற்றப்படுகின்றது.
இவ்விழாவானது கிழக்கிலங்கை இந்து முஸ்லிம் மக்களினாலும் இனபேதமற்ற முறையில் கொண்டாடப்படுவதனால் இரு சமூகங்களின் உறவுப் பாலமாக திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.