இராணுவப் படையினர் வடக்கில் மட்டுமல்ல நாட்டின் எல்லா இடங்களிலுமே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள், எனவே வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்து மட்டும் இராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியப்படக்கூடியதல்ல என்று இந்தியக் குழுவினரிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக அவரது பேச்சாளர் பந்துல ஜயசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐந்து நாள் பயணமாக இலங்கை சென்ற சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரசியல் கட்சி பிரமுகர்களையும் மக்களையும் சந்தித்தப் பின்னர் நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதியையும் சந்தித்துப் பேசியிருந்தார்கள்.
தமிழர்கள் செறிந்துவாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இராணுவமயமாக்கலை இல்லாது செய்வது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் இந்தியக் குழுவினர் இதன்போது எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த ராஜபட்ச, நாடு முழுவதும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம். வடக்கில் நிலைகொண்டுள்ள துருப்புகளை வெளியேற்றுவது சாத்தியமாகாது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்? என்று இந்தியக் குழுவினரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர இலங்கையில் இராணுவமயமாதல் என்ற ஒன்றுமே இல்லை என்று பிபிசியிடம் கூறினார்.
இலங்கை ஜனாதிபதி அமைத்த எல்எல்ஆர்சி என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று தான் வடக்கிலிருந்து இராணுவ பிரசன்னத்தை மீளப்பெறுவது.
'உலகின் மற்ற நாடுகளின் தலைநகர்களில் கண்ணுக்குத் தெரியக்கூடிய மாதிரியே இராணுவ பிரச்சன்னம் இருக்கின்ற போது இங்கு இலங்கையில் வெளிப்படையாக தெரிகின்ற மாதிரி விமான நிலையத்தில் கூட இராணுவப் பிரசன்னம் என்பது இல்லையே' என்று பந்துல ஜயசேகர வாதிட்டார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயணம் மிகவும் 'ஆக்கபூர்வமான நல்லெண்ண விஜயமாக' அமைந்திருந்தது என்று சுட்டிக்காட்டிய ஜயசேகர, எல்எல்ஆர்சி பரிந்துரைகள் பற்றியெதனையும் பேச மறுத்துவிட்டார்.
இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பின் 13ம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று '13 அமென்மென்ட் பிளஸ்' என்ற அணுகுமுறையில் அதிகாரப் பகிர்வுக்கு தயாராக இருப்பதாக தன்னிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
ஆனால் இவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கும் ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர பதிலளிக்க மறுத்துவிட்டார்.