4/12/2012

| |

வடகொரியா ரொக்கெட் ஏவ எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் உடன் நிறுத்த அமெரிக்கா எச்சரிக்கை

வட கொரியா ஏவவுள்ள ரொக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் சர்ச்சைக்குரிய இந்த ரொக்கெட் விண்ணுக்கு ஏவப்பட வுள்ளது.
இந்த ரொக்கெட் ஏவும் திட்டத்திற்கு பொறுப்பாக உள்ள வட கொரிய விண்வெளி தொழிநுட்ப குழுவின் செய்மதி கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பெக் சங்ஹோ இது குறித்து தலைநகர் பியொங்ஜியானில் சர்வதேச ஊடகவியலாளர்களிடம் கூறும் போது, ரொக்கெட்டுக்கு எரிபொருள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரொக்கெட் ஏவப்படும் சரியான நேரம் எனது தலைமையில் தீர்மானிக்கப்படும் என்றார்.
இந்நிலையில் வட கொரியா தனது ரொக்கெட் திட்டத்தை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மீண்டும் ஒரு முறை எச்சரித்துள்ளது. வட கொரியா தனது நாட்டு மக்களுக்கு அமைதியான, சிறந்த எதிர்காலத்தை வழங்க நினைத்தால் தனது ரொக்கெட் ஏவும் திட்டத்தை உடன் கைவிட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சர் கெய்ரோ கெம்பாலை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே ஹிலாரி கிளிண்டன் இதனைத் தெரிவித்தார். இந்த ரொக்கெட் ஏவும் திட்டம் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என கூறிய அவர் இது தொடர்பில் ஐ. நா. சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வட கொரியாவுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கப்படும் என எச்சரித்தார்.
வட கொரியா செய்மதியுடன் கூடிய ரொக்கெட்டை எதிர்வரும் 12-16 ஆம் திகதிக்குள் ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அது மறைமுகமாக ஏவுகணை சோதனையை நடத்துவதாக அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த ரொக்கெட் ஏவும் திட்டத்தையொட்டி பல விமான சேவைகளும் தனது விமானப் பாதையை மாற்றியுள்ளதோடு பிலிப்பைன்ஸ் விமானம் பறக்கத் தடை மண்டலம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது.
மறுபுறத்தில் வட கொரிய ரொக்கெட் தமது வான்பரப்புக்குள் வந்தால் அதனை தாக்குவதற்கு ஏதுவாக தமது ஏவுகணை செயற்பாட்டை இயக்கியுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. தென் கொரியாவும் தனது வான்பரப்புக்குள் ரொக்கெட் சென்றால் தாக்குவதாக எச்சரித்துள்ளது.
எனினும் இந்த ரொக்கெட் மேற்கு ஜப்பான் ஊடாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.