இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கியிருப்பது கவலைக்குரிய விடயம்.
இன்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும் மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேட முனைபவர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதன் பின்னணி என்ன? எதற்காக இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியே.
சிலை உடைப்பு என்பது மட்டக்களப்பில் மட்டும் இடம்பெறவில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உடைக்கப்பட்டது. திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை என்பன உடைக்கப்பட்டன. மட்டக்களப்பில் அண்மையில் சுவாமி விவேகானந்தர்சிலை உடைக்கப்பட்டது. பின்னர் இப்போது நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
இச் சிலைகள் யாரால் எதற்காக உடைக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க இச்சிலை உடைப்பு விடயத்தை வைத்து கூட்டமைப்பினர் அரசியல் நடாத்த நினைக்கின்றனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற சிலை உடைப்பு விடயத்தை அரசியலாக்க நினைக்கும் கூட்டமைப்பினர். பிள்ளையான் குழுவினரே சிலையினை உடைத்தனர் என்று தம்பட்டம் அடிக்கின்றனர்.
எதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினருக்கு சிலை உடைப்பு நல்ல வாய்ப்பாகிவிட்டது. இன்று பிள்ளையான் குழுவினருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துவிட்டது எப்படி மக்களை மடையர்களாக்கலாம். பிள்ளையானைக் கவிழ்க்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த கூட்டமைப்பினருக்கு சிலை உடைக்கப்பட்டமை சிலை உடைப்பை வைத்து அரசியல் நடாத்தலாம் என்று நினைத்துவிட்டனர்.
பிள்ளையான் குழு சிலையை உடைத்துவிட்டது என்று அறிக்கைகள் விடும் கூட்டமைப்பினர் மக்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டனர். மட்டக்களப்பான் மடையன் என்று யாழ்ப்பாணத்தலைமைகள் சொல்வது புதிய விடயமல்ல. ஆனால் மட்டக்களப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே கிழக்கு மக்களை மீண்டும் மடையர்களாக்க நினைப்பது கவலைக்குரியது.
மட்டக்களப்பில் மட்டும் சிலை உடைக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் பரவலாக சிலை உடைக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் சிலை உடைக்கப்பட்டபோது மட்டும் பிள்ளையான் உடைத்தான் என்று சொல்வது முட்டாள் தனமானது. அப்போ யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்க பிள்ளையான் சென்றாரா? திருகோணமலையில் சிலை உடைக்க சென்றாரா? கூட்டமைப்பினரின் முட்டாள்தனமான அறிக்கைககளும் வக்காளத்து வாங்கும் தமிழ் ஊடகங்களும்.
கூட்டமைப்பினர் சிலை உடைப்பு விடயத்தை அரசியலாக்கும் அதே வேளை சிலை விடயத்திலும் கூட மட்டக்களப்பை ஓரக்கண்ணால் பார்க்கின்றது. புறக்கணிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது கூட்டமைப்பினர் என்ன செய்தனர். திருகொணமலையில் சிலை உடைக்கப்பட்டபோது என்ன செய்தனர் இன்று மட்டக்களப்பில் சிலை உடைக்கப்பட்டபோது என்ன செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது பாரிய எதிர்ப்பினை தெரிவித்ததோடு உடனடியாக சிலை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து நிறுவினர். அதே போன்று தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது தமது தலைவர் என்பதற்காக பாரிய எதிர்ப்புக்களை தெரிவித்து உடனடியாக சிலைகளை நிறுவினர்.
மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தர் சிலை உட்பட 5 சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு கூட்டமைப்பினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். ஒரு சிலையையாவது நிறுவ முன்வந்தனரா? வெறுமனே சிலை உடைப்பை வைத்து அரசியல் நடாத்த மட்டுமே நினைக்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உடனே சிலைகளை நிறுவ முன் வந்தவர்கள் ஏன் மட்டக்களப்பில் நிறுவ முன்வரவில்லை. மட்டக்களப்பு என்பதனாலா?
மட்டக்களப்பில் உடைக்கப்பட்ட சிலைகளை உடனே நிறுவ நடவடிக்கை எடுத்ததைக்கூட எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கின்றனர் கூட்டமைப்பினர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிலையை உடனே நிறுவ முடியும் மட்டக்களப்பில் நிறுவக்கூடாது. இவர்களுக்கு மட்டக்களப்பான் எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணம். அவர்கள் எதனையும் செய்யலாம் மட்டக்களப்பான் எதைச் செய்தாலும் எதிர்த்து அரசியல் செய்வதும் வர்கள் வேலை.
வர்களுக்கெல்லாம் பக்கப்பாட்டுப்பாடி கிழக்கு மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் யோகேஸ்வரன் போன்றவர்கள் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியும் என்று நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு 15000 க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்ததமை கூட்டமைப்பினருக்கு கடும் தலையிடியை ஏற்படுத்தி இருந்ததது.
வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து சிலை உடைப்பின் சூத்திரதாரிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட்டு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.