பாரம்பரியம் மிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையையும், சாரணியத்ததிற்கு வித்திட்ட பேடன்பவுல் அவர்களின் திருவுருவச்சிலையையும், புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை மற்றும் மட்/ஆனைப்பந்தி பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைகளையும், விஷமிகள் உடைத்து சேதமாக்கியதை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மேலோங்கி மக்கள் மகிழ்ச்சியாக தத்தமது வாழ்க்கையினை அச்சரீதியின்றி மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இவ்வாறாக திட்டமிட்ட சில விஷமிகளின் செயற்பாடு ஒட்டுமொத்த மக்களினையும் மீண்டும் குழப்ப நினைக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம்.
ஜனநாயகத்தின் வழியில் அகிம்சைக்காக போராடி அகிம்சையின் சின்னமாக விளங்கும் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையையும், இளைஞர்களையும் சமூகத்தையும் நல்வழிப்படுத்த மனித நேயத்திற்கு மதிப்பளித்த சாரணியத்தின் ஸ்தாபகர் பேடன்பவுல் அவர்களின் திருவுருவச்சிலையையும்; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமூக மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்டு உழைத்த விபுலானந்த அடிகள் மற்றும் மண்டூர் பெரியதம்பிப்புலவர் அவர்களின் திருவுருவச் சிலைகளையும் உடைத்துச் சேதமாக்கிய விஷமிகள் எந்த நோக்கத்திற்காக திட்டமிட்டு செய்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறாத வண்ணம் பொதுமக்கள் பொறுமை காத்து குற்றவாளிகளை கண்டறிவதில் பொலிசாரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோரி நிற்கின்றது.