4/06/2012

| |

மியன்மார் மீதான தடைகளை தளர்த்தியது அமெரிக்கா: தூதுவரையும் நியமிக்க திட்டம்

மியன்மார் மீதான ஒருசில தடைகளை தளர்த்தவுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இதன்படி மியன்மார் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார பயணத் தடைகள் தளர்த்தப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். இதில் மியன்மார் நாட்டு தலைவர்கள் அமெரிக்கா வருவதை அனுமதிக்கவுள்ளதோடு, மியன்மாருக்கான அமெரிக்க தூதுவரும் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தலைவர்களும் மியன்மார் மீதான தடைகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தலில் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூக்கியின் கட்சி 45 ஆசனங்களில் 40ஐ வென்றது. இந்த தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட்டதாக அனைத்து தரப்புகளும் குறிப்பிட்டன.
இதனைத் தொடர்ந்தே அந்த நாட்டின் மீது அமெரிக்கா நீண்டகாலமாக விதித்திருந்த பல்வேறு தடைகளை தளர்த்த முன்வந்துள்ளது. மியன்மாரின் ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக இத்தடைகள் தளர்த்தப்படுவதாக ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அரசு மியன்மாரில் அலுவலகம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான நிலையம் திறக்கப்பட்டு தனது தூதுவரையும் அங்கு அனுப்பும் என ஹிலாரி கிளிண்டன் குறிப்பிட்டார்.
எனினும் இதன் மூலம் மியன்மார் மீதான அனைத்து பயணத்தடைகளும் விலக்கிக் கொள்ளப்படாது என அமெரிக்க ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அரசியல் சீர்திருத்த சிந்தனை கொண்ட அதிகாரிகளுக்கே அமெரிக்கா வர அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதில் மியன்மார் வெளியுறவு அமைச்சருக்கு வொஷிங்டன் விரைவில் அழைப்பு விடுக்கும் எனவும் சுகாதார அமைச்சரும் அமெரிக்கா விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேபோன்று மியன்மாரில் முதலீடு செய்வதற்கான சில தடைகள் அமெரிக்க அரசினால் விலக்கிக் கொள்ளப்படவுள்ளன.
முன்னதாக பிராந்திய நாடுகளின் அமைப்பான ஆசியானும் மியன்மாரில் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை விலக்கிக் கொள்ளுமாறு சர்வதேச நாடுகளுக்கு நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மியன்மார் மீதான ஒரு சில தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தவுள்ளதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் லண்டனில் கூறினார். எனினும் இதன் மூலம் மியன்மாருடனான பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக திறந்து விடப்படும் என பொருளல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மியன்மார் தனது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் வில்லியம் ஹக் குறிப்பிட்டார். மியன்மார் இடைத் தேர்தலில் அவுங் சான் சூக்கி வெற்றிபெற்றாலும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் 80 வீதமான ஆசனங்கள் இராணுவ கூட்டணி வசமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.