4/22/2012

| |

தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது ஷரத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம்.

""தமிழர்கள் பகுதிகளில் உள்ள ராணுவத்தை திரும்பப் பெற, இலங்கை அரசிடம், எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தியது'' என, கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவில் இடம்பெற்ற எம்.பி.,க்களான மாணிக்தாக்கூர், சித்தன், கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர், கூட்டாக நிருபர்களை, சென்னையில் இன்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:

கண்காணிப்பு: இலங்கையில் உள்ள தமிழர்களிடம், இன்னும் ஒருவித பயம் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழர்கள் கோவில் மற்றும் விழாக்களுக்கு செல்லும் போது, ராணுவத்தினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அவர்களை மடக்கி கேள்வியும் கேட்கின்றனர். இதுவே, தமிழர்களிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. தமிழர்கள் பகுதியில் இருந்து, ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என, இலங்கை அரசிடம் வலியுறுத்தினோம். இதை, இலங்கை அரசு ஏற்று, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது. அதேபோல், தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும், 13வது ஷரத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறோம்.

ராணுவத்தினர் வரவில்லை: வவுனியா அருகே உள்ள மாணிக்பாம் முகாம்களில், மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். தற்போது, 6 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள், தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இலங்கை சென்ற பின், அங்கு எங்கெல்லாம் பார்வையிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த பகுதிகளுக்கு செல்லாமல், நாங்களே தெரிவு செய்த இடத்தை பார்வையிட வேண்டும் என கேட்டோம். நாங்கள் பார்வையிட்ட இடங்களுக்கு, குழுவினருடன் ராணுவத்தினர் வரவில்லை.

ஆசிரியர்கள் இல்லை: இந்தியா உதவியுடன், 800 கோடி ரூபாயில் நடந்து வரும் காங்கேஷன் துறைமுகம் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டோம். எல்லாவற்றையும், அதிபர் ராஜபக்ஷேவிடன் எடுத்துரைத்தோம். இலங்கையில் நடந்த போரில், வடக்கு மாகாணத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்தன. அதை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. போருக்கு முன், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற ஆசிரியர்கள் நாடு திரும்பினர். இதனால், அங்குள்ள பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. தேர்தல் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத்திற்கு சென்று, நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.