3/26/2012

| |

வயல் நிலங்களை இழப்பதாக கிழக்கு விவசாயிகள் கவலை

கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள முன்னாள் விவசாய நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காணி பிரச்சனைகள் தொடர்பான நடமாடும் சேவையில் பெருமளவிலான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. தொடர்புடைய விடயங்கள் புனர்வாழ்வு ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள சில பகுதிகளில் தமது குடியிருப்புகள் மற்றும் வயல் காணிகளின் உரிமை தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிடம் முஸ்லிம் விவசாயிகள் முறையிட்டனர். போர்க் காலத்தில் முஸ்லிம்களினால் விவசாயத்தில் ஈடுபட முடியாமல் போன சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல் நிலங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு அங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக முஸ்லிம் விவசாயிகள் பலரும் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து, பல தசாப்தங்களாக மக்களின் குடியிருப்பு பகுதிகளாகவும் விவசாய நிலங்களாகவும் விளங்கிய பிரதேசங்களை கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக அதிகாரிகள் அடையாளப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கூறினார். இவ்வாறான பிரச்சனைகளே மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு நியாயம் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் போருக்கு பின்னர் சுதந்திரமான சூழ்நிலை காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் மூவினங்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சனை தொடர்ந்தும் பாரதூரமான விவகாரமாக இருப்பதாக மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.