3/26/2012

| |

முப்பது வருடங்களின் பின்னர் துரித மேம்பாடு காணும் வட மாகாண வீதிகள்

வட பகுதியில் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவந்த யுத்தசூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதான வீதிகள் உள்ளடங்கலாக உள்ளூர் வீதிகள் பலவும் செப்பனிடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் அதிசயம் என்ற இலங்கை நோக்கி நாட்டை அபிவிருத்தி செய்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வீதி அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானவர்களில் 97 வீதமானவர்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பல வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. வட பகுதியையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான தரை வழிப்பாதையாகவிருக்கும் ஏ-9 வீதி புதிதாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் மீள்புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஏ-9 வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டதும் குறைந்த நேர காலத்திற்குள் வட பகுதியை மக்கள் சென்றடைய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக ஏ-15 வீதியில் காணப்படும் சங்குப்பிட்டி பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் கம்பீராக காட்சியளிக்கிறது. நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு சிறந்த வீதிக்கட்டமைப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருக்கும் இலங்கை அரசாங்கம் வீதி அபிவிருத்தியில் கூடுதலாகவே கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக நீண்டகாலம் யுத்த சூழலில் மூழ்கியிருந்த வடபகுதியின் வீதிக் கட்டமைப்பு அபிவிருத்தியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூடுதலான கவனம் செலுத்தியுள்ளது. வட மாகாணத்தில் 1960 கிலோ மீற்றர் நீளமான மாகாண வீதிகளும், 7600 கிலோ மீற்றர் நீளமான உள் வீதிகளும் காணப்படுகின்றன. இந்த வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்கென ஜனாதிபதி செயலணியின் ஊடாக 2009 ஆம் ஆண்டு 200.82 மில்லியன் ரூபாவும், 2010 ஆம் ஆண்டு 320 மில்லியன் ரூபாவும், 2011 ஆம் ஆண்டு 150 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன. வட மாகாண வீதி இணைப்புத் திட்டம், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உடனடி வீதி அபிவிருத்தித் திட்டம் மற்றும் பிராந்திய வீதி அபிவிருத்தித் திட்டம் என மூன்று கட்டங்களாக வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தை எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக வட மாகாண சபை அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 79.8 மில்லியன் ரூபா செலவில் 28 பிரதான வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தில் 39. 73 மில்லியன் ரூபா செலவில் 12 பிரதான வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் 66.58 மில்லியன் ரூபா செலவிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வட மாகாண சபை தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலான வீதிகளின் நிர்மான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன் சில வீதிகள் முடியும் தறுவாயில் காணப்படுகின்றன. அதேபோல 2010 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி செயலணியின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் 88.5 மில்லியன் ரூபாவில் பல்வேறு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 60.10 மில்லியன் ரூபா செலவில் பிரதானமான 10 வீதித் திட்டங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52.8 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும், வவுனியா மாவட்டத்தில் 57.6 மில்லியன் ரூபா செலவிலும், மன்னார் மாவட்டத்தில் 50.9 மில்லியன் ரூபா செலவிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் மூலம் வட மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளி மாவட்டங்களின் பாரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென அரசாங்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்பொழுது நிலவும் அமைதிச் சூழலில் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை தரைவழியாக ஏனைய பகுதிகளுக்கு அனுப்ப முடியுமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஏ-9 வீதியின் அபிவிருத்திப் பணிகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும் குறைந்த நேரத்துக்குள் யாழ். உற்பத்திப் பொருட்களை தென்பகுதி சந்தைக்கு அனுப்புவதற்கு முடியுமாகவிருக்கும் என்றும் அவர் கூறுகின்றார். தென் பகுதி சந்தையில் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கடும் கிராக்கி காணப்பட்ட நிலையில், கடந்த கால யுத்த சூழலால் தமது உற்பத்திப் பொருட்கள் வட பகுதி தவிர்ந்த ஏனைய சந்தைகளுக்கு அனுப்ப முடியாது வட பகுதி விவசாயிகள் தவித்தனர். 30 வருட கால யுத்தம் ஜனாதிபதி அவர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் சகல பகுதிகளுக்கும் சுதந்திரமாகப் பயணிக்கே கூடிய நிலைமை ஏற்பட்ட பின்னர் வடபகுதியின் பல்வேறு உற்பத்திப் பொருட்கள் தரை வழியாக தென் பகுதிக்கு வர ஆரம்பித்தன. இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரதான தரை வழிப் பாதையான ஏ-9 வீதியை செப்பனிடும் பணிகளை அரசாங்கம் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் வட பகுதியின் விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களை எந்தவிதமான பாதிப்புமின்றி விரைவில் தென்பகுதி சந்தைக்கு கொண்டுவர முடியும். வீதி அபிவிருத்தியானது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி பகுதியில் கைத்தொழில் பேட்டையை மீண்டும் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு வீதிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது. வட பகுதியில் அசாங்கம் முன்னெடுத்திருக்கும் வீதி அபிவிருத்திப் பணிகள் அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கும் மிகவும் புத்தூக்கம் அளிப்பவையாக அமைந்திருக்கும். அதேநேரம், யுத்த அழிவுகளிலிருந்து மீண்டுவரும் வடபகுதியில் பல்வேறு வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு முதலீட்டாளர்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு தமது தொழில் பேட்டைகளையும், தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கு முன்வந்துள்ளனர். இந்த முலீடுகளைத் தொடர்ந்தும் அதிகரிக்கவேண்டு மாயின் வீதிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் அடையாளம் கண்டு வீதி அபிவிருத்திப் பணிகளைத் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது. கடந்த 30 வருட அமைதியற்ற சூழலில் வடபகுதியில் பிறந்து வளர்ந்த இளம் சமூகத்தினரில் பலர் தற்போதே தமது பிராந்தியங்களில் காப்பெற் வீதிகளைக் கண்டுள்ளனர். இதுவரை காலமும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்திருந்த இந்த இளம் சமுதாயம் வளமான எதிர்காலத்தைக் கண்டுள்ளது. கூடிய விரைவில் வட பகுதிக்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். வட பகுதிக்குச் செல்வதற்கு நீண்ட நேரம் எடுப்பதாலேயே இனங்களுக்கிடையில் சிறிய இடைவெளி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருந்த அவர் , அதிவேக நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட்டால் அந்த இடைவெளி குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று நான்கு மணித்தியாலங்களில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை சென்றடைய முடியுமென்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் காட்டிவரும் அக்கறை மற்றும் வடபகுதியின் வீதி அபிவிருத்தியில் செலுத்தியிருக்கும் சிரத்தை வட பகுதியை மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளையும் அபிவிருத்தி யடைந்த பிரதேசங்களாக மாற்றும் என்ற நம்பிக்கை இலங்கையர்கள் அனைவர் மத்தியிலும் தற்பொழுது பலமாகக் காணப்படுகிறது.