3/07/2012

| |

இந்தியத் தேர்தல்கள்-காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு

இந்தியாவில் ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதுவரை ஆட்சியில் இருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 50 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 38 இடங்களும் கிடைத்துள்ளன.உத்திரப்பிரதேசத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை படுதோல்வியடைந்துள்ளன. 403 இடங்களைக் கொண்ட உ பி யில் சமாஜ்வாதி கட்சி 226 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 77 இடங்களிலும் வென்றுள்ளன.

கட்சி வெற்றி ஆனால் முதல்வர் தோல்வி

உத்திராகாண்ட் மாநில முதல்வர் பி சி கண்டூரி
அண்டை மாநிலமான உத்தராகண்டில் காங்கிரஸ் மற்றும் பா ஜ க இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குள்ள 70 இடங்களில் பா ஜ க 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களிலும், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சி நான்கு இடங்களையும் பெற்றுள்ளன.
எனினும் இந்த மாநிலத்தின் முதல்வர் பி சி கண்டூரி தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

அகாலி தளம் மீண்டும் வெற்றி

வெற்றியை கொண்டாடும் அகாலி தளத் தொண்டர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதள-பா ஜ க கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு முதல் முறையாக ஆட்சியில் இருந்த கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
அங்கு அகாலிதளம் தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 117 இடங்களில் 68 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 46 இடங்கள் கிடைத்துள்ளன. இதர கட்சிகள் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு மாநிலம் என்று கருதப்படும் கோவாவில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து பா ஜ க ஆட்சியை கைப்பற்றியுளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

தோல்விக்கு ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார்

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அங்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு தான் தலைமையேற்றிருந்த நிலையில் இந்தத் தோல்விகள் தனக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்திரப் பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்பார் என்று அவரது மகனும் கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் முலாயம் சிங் யாதவ் மாநில சட்டமன்றத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
தமது கட்சிக்கு இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ள மாநில மக்களுக்கு தான் நன்றி கூறுவதாக பிபிசி செய்தியாளரிடம் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்

"மன்மோகன் சிங் பதவி விலகத் தேவையில்லை" 

முலாயம் சிங் யாதவ்
தமது கட்சிக்கு வாக்களித்த உத்திரப் பிரதேச மக்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரி்வித்துக் கொள்வதாக முலாயம் சிங் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்தத் தோல்வியை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய தேவையும் இல்லை"
மாநிலத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாக இதுவரை எந்தப் பிரதமரும் பதவி விலகிய மரபு இல்லை. எனவே ஏன் மன்மோகன் சிங் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் மாயவாதி அரசால் பெரும் பொருட்செலவில் நிறுவப்பட்ட அவரது கட்சி சின்னமான யானை சிலைகள் மற்றும் அவர் உட்பட அவரால் அமைக்கப்பட்ட தலித் தலைவர்களின் சிலைகள் ஆகியவை எதுவும் இடிக்கப்டாது எனவும அவர் தெரிவித்தார்.