3/30/2012

| |

பிரிக்ஸ் கூட்டமைப்பு சாதிக்க முடியுமா ? இரான் அமைதி நோக்கங்களுக்கு அணு சக்தியைப் பயன்படுத்திக்கொள்வது அனுமதிக்கப்படவேண்டும்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து வேகமாக வளரும் பொருளாதாரங்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ப்ரிக்ஸ் என்ற அமைப்பின் நான்காவது உச்சி மாநாடு நேற்றும் இன்றும் டில்லியில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில், இந்த அமைப்பு, சிரியா மற்றும் இரான் குறித்த பிரச்சினைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. இரானைப் பொறுத்தவரை, இரான் அமைதி நோக்கங்களுக்கு அணு சக்தியைப் பயன்படுத்திக்கொள்வது அனுமதிக்கப்படவேண்டும் என்று ப்ரிக்ஸ் கூறியிருக்கிறது. இது போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேசப் பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கும் ப்ரிக்ஸ் அமைப்பு, உண்மையில் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த அமைப்பல்ல, அதன் உறுப்பு நாடுகளிடையேயே, முரண்பாடுகள் இருக்கின்றன எனவே அதனால், சர்வதேச அரங்கில் பெரிய தாக்கத்தைச் செலுத்த முடியாது என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் பொருளாதாரப் போட்டிகள் ஆகியவை இருந்தாலும், இந்தப் பிரச்சினைகள் கடந்த சுமார் 60 ஆண்டுகளில் தோன்றியவைதான். ஆனால், இரு நாடுகளுக்கிடையே பல ஆயிரம் ஆண்டுகளாக கலாசார, நாகரீகத் தொடர்புகள் இருந்திருக்கின்றன