3/24/2012
| |
உள் விவகாரங்களில் தலையீடு செய்ய சர்வதேசம் பிரேரணையை பயன்படுத்தலாகாது
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசுகின்றவர்கள் தமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலில் கவனம் செலுத்துவது மிக அவசியம் என்று மனித உரிமைகள் தொடர் பான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19வது மாநாட்டில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்றை கொண்டு வந்திருந்தது. அப்பிரேரணை நேற்று முன்தினம் வாக்கெடுப்புக்கு எடுக்கப்பட்டது. இங்கு இலங்கை சார்பில் விசேட உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டுக்கு கொண்டு வந்த இப்பிரேரணையானது காண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசும் செயலை ஒத்ததேயன்றி வேறில்லை. இதனை எவரும் மறுக்க மாட்டார்கள்.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பலஸ்தீனிலும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ அவர்களது கூட்டாளிகளோ கண்டு கொள்கிறார்களுமில்லை அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றார்களுமில்லை. அவை குறித்து பேசவே அவர்கள் தயாரில்லை.
இப்படியானவர்கள்தான் எம்மை நோக்கி சுட்டு விரலை நீட்டுகின்றார்கள். எமக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமது ஏனைய நான்கு விரல் களும் தம்மையே அடையாளம் காட்டுகின்றன என்பதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அடுத்தவரை குற்றம் சாட்ட முன்னர் அதற்குரிய தகுதி எம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் பரிசீலித்துக் கொள்வது மிக அவசியம் என வலியுறு த்தப்படுகின்றது.
எமது நாடு பயங்கரவாதத்தின் பிடியில் 30 வருடங்கள் சிக்கி சின்னாபின்னமாகின. அதன் கோரப் பிடியிலிருந்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இந்த நாடு விடுவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் அமெரிக்கா இப்படியான பிரேரணையைக் கொண்டு வந்திருக்கின்றது.
ஆனால், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நாட்டை மீளக் கட்டியெழுப்பவும், இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவென உள்நாட்டு செயன்முறை வெளியிடப்பட்டுள்ளன. அது வெளியாகி மூன்று மாதங்கள்தான் ஆகின்றன.
அந்த செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல விதமான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. பல் கலாசார, பல்மொழி, பல்லின, பல சமய செயற்பாடுகளைக் கொண்ட நாடாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களும் அவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய நல்லிணக்க த்தையும், இன ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டதாக இத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் எமது செயற்பாடுகளைத் தொடர்வதற்கு கால அவகாசம் வழங்காமல் இவ்வாறு பிரேரணை கொண்டு வருவது எந்த வகையில் நியாயம். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டு வருகின்றது.
இதன் பின்னரும் அவ்வாறே செயற்படும். அதனால், இப் பிரேரணையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதன் காரணத்தினால் தான் இப்பிரேரணையானது வெளிநாட்டவர் இலங்கையில் தலையீடு செய்வதற்கான ஒரு தந்திரமாக கருத வேண்டியுள்ளது.
இதேநேரம் இம்மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவளித்து உரையாற்றிய சீன நாட்டுத்தூதுவர் மிகக் குரூரமான பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் உதவ வேண்டுமே ஒழிய, அதன் சுபீட்சத்திற்குத் தடைக் கல்லாக இருந்துவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
இதேபோல் இம்மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய கியூபா நாட்டுப் பிரதிநிதி உரையாற்றும் போது; இப்பிரேரணையானது இலங்கையின் இறைமையில் தலையீடு செய்வதற்கு வழிவகுப்பது போல் அமைந்திருப்பதோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கொள்கையை சிதைக்கும் வகையிலும் காணப்படுகின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
எந்தவொரு நாட்டுக்கும் எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு நாம் ஆதரவு நல்க மாட்டோம் என பங்களாதேச நாட்டின் தூதுவர் இம்மாநாட்டில் உரையாற்றிய போது குறிப்பிட்டதுடன் இலங்கைக்கு ஆதரவும் நல்கினார்.
ஆகவே, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு இப்பிரேரணையை சர்வதேசம் ஒருபோதும் பயன்படுத்தலாகாது என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.