3/05/2012

| |

கச்சதீவு திருவிழா: இலங்கை - இந்திய யாத்திரிகர்கள் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படையினரினதும் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இந்த திருவிழாவில் இலங்கையிலும் இந்தியாவிலுமிருந்து 9000 ற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்துகொண் டனர். புனித அந்தோனியார் திருவிழாவை யொட்டி கச்சதீவு களைகட்டியிருந்தது.
அண்மைக்காலமாக இரு நாட்டினது மீனவர்களுக்கிடையில் சிறு சிறு பிரச்சினைகள் நிலவு கின்ற போதிலும் இரு நாட்டு மக்களும் இணைந்து தோழமையுடன் இத்திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இது தொடர்பில் இங்கு வருகை தந்திருந்த அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இது இரு நாட்டுக்கான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் திருவிழாவாகவும் அதேவேளை மீனவர்கள் மத்தியில் சுமுக உறவை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆராதனையுடன் ஆரம்பமானது. நேற்று முன்தினம் முதலே இரு நாட்டினதும் மக்கள் கச்சதீவை நோக்கி திரண்டனர்.
திருவிழாவுக்கு வருகை தந்திருந்த மக்கள் கச்சதீவில் சிறுசிறு கூடாரங்களை அமைத்துக்கொண்டு அடிப்படை வசதியற்ற போதிலும் மகிழ்ச்சியுடன் நிகழ்வுகளில் கவர்ந்துகொண்டதைக் காண முடிந்தது.
இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜெஸ்டின் ஞானப்பிரகாச அடிகளாரின் தலைமையில் பெருமளவிலான குருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளும், இந்தியாவில் திண்டுக்கல் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஆரோக்கியசாமி அடிகளாரின் தலைமையில் குருக்கள் கன்னியாஸ்திரிகள் பொது நிலையினரும் கலந்துகொண்டனர்.
கச்சதீவில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் பாதுகாப்புப் படையினர் தண்ணீர், பக்தர்களுக்கான உணவு உட்பட சகல அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தமை சகலராலும் பாராட்டுகளை பெற்றது.
இலங்கை கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இரு நாட்டு மக்களையும் படகுகள் மூலம் அழைத்து வந்திருந்தனர்.
இம்முறை திருவிழாவில் இலங்கை, இந்திய ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு மீனவர் பிரச்சினை மற்றும் கச்சதீவு பிரச்சினைகள் பற்றி முழுமையான தகவல்களைத் திரட்டுவதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாம் எதிர் பார்த்ததை விட மூவாயிரம் பக்தர்கள் இம்முறை கச்சதீவு திருவிழாவிற்கு மேலதிகமாக வருகைதந்துள்ளனர். அவர்களுக்கான சகல வசதிகளையும் அரசாங்கத்தின் வழிகாட்டலுடன் படையினருடன் இணைந்து மேற்கொள்ள முடிந்ததாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை கச்சதீவு பிரச்சினை என பிரச்சினைகள் உள்ள போதும் இரு நாட்டு மக்களும் சிநேகபூர்வமாக இணைந்து இந்த விழாவில் பங்கேற்று தமது கருத்துக்களையும் பரிமாற்றிக்கொண்டமை திருவிழாவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது.
அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன் பாதுகாப்புப் படையினர், குறிப்பாக கடற்படையினர் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க இத்திருவிழா பற்றி கருத்துத் தெரிவிக்கையில்; இரு நாட்டு மீனவர்களும் இணைந்து நடத்திய இந்த திருவிழா சுதந்திரமாகவும் விமரிசையாகவும் நடந்தேறியது. இந்த நிலை தொடரவேண்டும். புனித அந்தோனியாரின் ஆசீர் இருநாட்டு மக்களுக்கும் கிட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரதிநிதிகள் கச்சதீவில் சந்திப்பு

* அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இருதரப்பு பேச்சு
* சிறந்த தீர்வை பெற்றுத் தருவதாக உறுதி
* சீமான், வைகோ போன்றோரால் இருநாட்டு உறவு பாதிக்காது
கச்சதீவில், இந்திய - இலங்கை மீனவ சமூகத்தின் பிரதிநிதிகளை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுடன்
அமைச்சர் டக்ளஸ்

இரு நாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அமைச்சர் இச்சந்திப்பின்போது இருதரப்பினருக்கும் உறுதிமொழி வழங்கினார்.
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளைத் தான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இச்சந்திப்பின்போது இரு தரப்பு மீனவர்களும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு விளக்கிக் கூறியதாகவும் கச்சதீவிற்கு வந்திருந்த இந்திய மற்றும் இலங்கை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்புத் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் வடக்கு கடலில் தாங்கள் மீன்பிடிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இராமேஸ்வரம் பகுதியில் மீன்வளம் குறைந்திருப்பதால், ஜீவனோபாயத்துக்காகத் தாம் இங்கு வரவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனாலேயே பல்வேறு
பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது தொடர்பில் எமக்கு சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தாருங்கள் என இந்திய மீனவர் சமூகப் பிரதிநிதிகள் என்னிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
அதேநேரம், இலங்கை மீனவர்களும் தமது பிரச்சினைகள் குறித்து எனக்கு எடுத்துக் கூறினார்கள். இரு நாட்டு மீன்பிடித்துறை அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பூரண தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக நான் இரு தரப்பினருக்கும் உறுதிமொழி வழங்கினேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ் நாட்டில் சீமான் போன்றவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இலங்கை - இந்திய உறவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ந்தும் இந்தியாவின் பூரண ஒத்துழைப்பு இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.
குறுகிய அரசியல் இலாபத்துக்காகவே சீமான் போன்றவர்கள் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். குறுகிய இலாபத்துக்காக பழையவற்றைக் கிளறுவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கச்சதீவுக்கு வருகை தந்திருந்த இந்திய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீதான பொருளாதாரத் தடையை விதிக்குமாறு தமிழக சட்ட சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளார். இது இலங்கையைப் பாதிக்குமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இந்தியா இலங்கை மீது ஒருபோதும் பொருளாதாரத் தடையை விதிக்காது என்றார். கச்சதீவில் இந்தியக் கொடி நாட்டப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், வைகோவும் கூறியுள்ளார்களே இதுபற்றிய கருத்து என்ன என்று இந்திய ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்த விடயத்திலும் தமிழ் நாட்டின் நிலைப்பாடு எதுவாகவிருந்தாலும், இலங்கை சம்பந்தமான நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாகவே உள்ளது. நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்றார்.
இலங்கை கடற் பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க கோரிக்கை
கச்சதீவை இலங்கை பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை. தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடலில் மீன்பிடிக்கும் அனுமதியை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பெற்றுத்தர வேண்டும் என இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்திருந்த இந்திய மீனவர்களைச் சந்தித்து உரையாடிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம், பாம்பன் நாகப்பட்டிணம், தங்கச்சி மடம், மண்டபம் போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்திருந்த மீனவர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், எமது பிரதேசங்களில் மீன் வளம் இல்லாத காரணத்தினாலேயே நாம் இலங்கைக் கடலில் மீன்பிடிக்கிறோம். எமது வாழ்வாதாரத் தொழிலும் பல தசாப்தங்களாக செய்து வரும் தொழிலும் இதுதான்.
அதனால்தான் நாம் தாக்கப்படும் போதும் சிறைப்பிடிக்கப்படும் போதும் மீண்டும் மீண்டும் இலங்கைக் கடலில் மீன்பிடிக்க வருகிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இரு அரசாங்கங்களுக்கிடையிலும் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று எம்முடன் பேச்சு நடத்தினார். எனினும் இந்த நிமிடம் வரை எமது பிரச்சினைகளுக்குத்தீர்வு கிட்டவில்லை.
இரு அரசாங்கங்களும் இது தொடர்பில் பேச்சு நடத்தி முடிவொன்றுக்கு வர வேண்டும். அல்லது மேற்படி மீன்பிடி பிரதேசங்களில் வாழும் எங்களுக்கு இந்திய அரசு வேறு வாழ்வாதாரத் தொழில்களை வழங்க வேண்டும். அப்போது தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்