3/29/2012
| |
க.பொ.த.சா/த பரீட்சை இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மாணவர்களில் ஒரு இலட்சத்து 64, 000 பேர் உயர்தரம் கற்க தகுதி
* 3908 பேர் 9 ‘A’
* 12,795 பேர் 9 ‘F’
* முதல் 10 இடங்களில் தமிழ்மொழி மூலம் இல்லை
* 463 பெறுபேறுகள் நிறுத்தம்
2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 2,70, 314 பாடசாலை பரீட்சார்த்திகளில் 1, 64, 191 பேர் க. பொ. த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தாம் தோற்றிய 9 பாடங்களிலும், ‘ஏ’ தரத்தில் 3908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 12,795 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘எவ்’ பெற்று சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா நேற்று தெரிவித்தார்.
க. பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 மாணவர்களின் பெயர்கள் வெளியிடுவதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார, அமைச்சின் செயலாளர் எச். எம். குணசேகராவுடன் அமைச்சர் பந்துல குணவர்தனா கலந்துகொண்டு பேசும்பேதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அகில இலங்கை ரீதியில் திறமை சித்திபெற்று முதல் 10 பேரின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களுக்கும் கொழும்பு, மாத்தறை, கண்டி, ரம்புக்கன உட்பட 13 மாணவ, மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் டொப் டென் முதற் பத்துப் பேரின் பெயர்ப்பட்டியலில் எந்தவொரு தமிழ் மொழி மூல மாணவனோ மாணவியோ தெரிவாகவில்லை என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் ஹிலிஜி10 வரிசைக்குள் வரவில்லை எனினும் மாவட்ட மட்டத்தில் முதல் 10 வரிசையில் வரலாம் எனக் கூறிய அமைச்சர் பந்துல மாவட்ட மட்ட, வலய மட்டத்தில் திறமைச் சித்திபெற்றவர்களின் விபரம் இன்று வெளியிடப்படும் என்றும் கூறினார்.
சகல பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 2001 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதேபோன்று சகல பாடங்களிலும் ஆகக் கூடுதலாக ‘எவ்’ பெற்று சித்தியடையாதவர்களும் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு 2 692 பேர் ‘எவ்’ பெற்றுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் ஆகக் குறைவான மாணவர்களே சகல பாடங்களிலும் ‘எவ்’ பெற்றுள்ளனர். வடக்கில் 64 மாணவர்களும், கிழக்கில் 792 மாணவர்களும் சித்தியடையவில்லை.
இம்முறை வெளியாகியுள்ள க. பொ. த சாதாரண தர பெறுபேறுகளுடன் கடந்த வருட பெறுபேறுகளை ஒப்பிடுகையில் சகல பாடங்களிலு ஏ சித்தி பெற்றவர்கள் 2010 ஆம் ஆண்டு 3057 மாணவர்கள், 2011 இல் 3908 மாணவர்கள், சகல பாடங்களிலும் ‘எவ்’ புள்ளிபெற்று சித்தியடையாதவர்கள் 2010 ஆம் ஆண்டு 14, 411 மாணவர்கள், 2011 ஆம் ஆண்டு 12,795 மாணவர்கள் எனவும் பதிவாகியுள்ளது என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
463 மாணவர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைப்பு
அகில இலங்கை ரீதியில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 463 பேரின் பரீட்சை பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை மண்டபத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த தவறியவர்கள் 410 பேர் உட்பட 663 பேரினதும் பரீட்சை பெறுபேறுகள் அனுப்பப்படவில்லை. ஆள்மாறாட்டம், பார்த்தெழுதுதல் போன்ற சம்பவங்களுக்காக இவர்களது பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டு ள்ளன.
காலியிலுள்ள ஒரு பாடசாலையில் 32 மாணவர்களுடன் பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பார்தெழுதியதாக பரீட்சை மண்டப அதிகாரிகளினால் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்பாக எதிர்வரும் 4ம் திகதி விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.