2/28/2012

| |

இலட்சக்கணக்கான மக்கள் பேரணி ; எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கையின் இறைமையில் தலையிட வேண்டாமென நாடெங்கும்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட உள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களடங்கிய பிரேரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உட்பட நேற்று நாடு முழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் இன, மத, அரசியல் பேதமின்றி இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
நாடு பூராவும் இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, கத்தோலிக்க மதத் தலைவர்கள், பெண்கள், வேடுவர்கள், கலைஞர்கள், அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதோடு அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.
தேசிய கொடியையும் ஜனாதிபதியின் உருவப்படத்தையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களின்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. சில பிரதேசங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்த தோடு கடைகளும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
150 ற்கும் அதிகமான நகரங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்ற தோடு பிரதான ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஊர்வலமாக வந்த மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான கண்டனப் பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் பங்கேற்றனர். கண்டனப் பேரணி 2 மணி நேரம் வரை நீடித்தது. லேக்ஹவுஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெருந்திரளான ஊழியர்களும் இதில் பங்கேற்றதோடு நிறுவன தலைவர் உட்பட பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
பிரதேச மட்டத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணிகளில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம். பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதேவேளை ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது ஐ.நா. அலுவலகங்கள், அமெரிக்க தூதரகம் என்பவற்றிற்கு மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
கம்பளை
பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் கம்பளை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மதத் தலைவர்கள், பிரதி அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் உட்பட பலரும் பங்குபற்றினர். இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் டி. எம். ஜெயரத்ன,
நாட்டின் இறைமைக்கும் தேசிய சுதந்திரத்திற்கும் உயிர் தியாகம் செய்யவும் இலங்கை மக்கள் தயாராக உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக இன, மத கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
சுதந்திர தேசமான இலங்கை மீது கைவைக்க அதிகார சக்திகள் முயற்சி செய்கின்றன. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக ஏதும் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதனால் அது இலங்கை மக்களின் பிணங்களுக்கு மேலே நடக்க வேண்டும்.
ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி பெற்ற வெற்றிகளை குழப்ப சதி நடைபெறுகிறது. இதற்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்படும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றார். மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவின் யோசனைக்கு எதிரான பேரணிகள் நடைபெற்றன.
வடக்கு, கிழக்கில் நடைபெற்ற பேரணிகளில் பெருமளவு தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். யாழ், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு நகரங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. ஏறாவூரில் நடைபெற்ற பேரணியில் சர்வதேசத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. மட்டக்களப்பு நகரில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு இந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு கச்சேரி முன்பாக நிறைவடைந்தது. இதன்போது ஐ.நா. சபைக்கு கையளிப்பதற்காக மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடியிலும் கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பென் கீ மூனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
திருகோணமலை மணிக்கூண்டுக்குக் கோபுரத்திற்கு முன்பாக கிழக்கு ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவின் தலைமையில் நடந்த பேரணியில், பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஆதிவாசிகள்
தம்பானை பகுதியில் நடைபெற்ற பேரணியில் ஆதிவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ஹொரவப்பொத்தானை
ஹொரவப்பொத்தானை நகரில் நடந்த பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள் உட்பட அநேகர் கலந்துகொண்டனர். அமைச்சர் எஸ். எம். சந்ரசேனவின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
புத்தளம்
புத்தளம் நகர சபை மேயரின் தலைமையில் புத்தளம் நகரில் நடைபெற்றது. சிலாபம் நகரில் நடைபெற்ற பேரணிக்கு பிரதி அமைச்சர் நியூமால் பெரேரா தலைமை வகித்தார்.
கம்பஹா மாவட்டம்
ஜா- எல நகரில் அமைச்சர் பிலிக்ஸ் பெரேராவின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைக்கு எதிராக எத்தகைய சதி முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுபட்டால் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
கந்தானை பகுதியில் டாக்டர் சுதர்சினி ஜெராஜ் பெர்ணாந்து புள்ளேயின் தலைமையில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் சரத் குணரத்னவின் தலைமையில் நீர்கொழும்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு
கொழும்பில் பல்வேறு பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.
பம்பலப்பிட்டியில் இருந்து ஆரம்பமான பேரணியில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான உட்பட பெருந்திரளான மக்கள், மதத் தலைவர்கள் கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் வீதித் தடைகளை இட்டு அதனை தடுத்தனர். இதனையடுத்து ஒரு குழுவினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதோடு அவர்கள் அமெரிக்க தூதரகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.
வெலிகம
வெலிகம நகரில் நடைபெற்ற பேரணியில் சிங்கள, முஸ்லிம் மதத்தலைவர்கள், அமைச்சர் மஹிந்த யாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு எதிரான சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அவர் கோரினார். இந்த பேரணியின்போது அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. முலடியனவில் பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் தலைமையில் பேரணி நடந்தது.
காலி
காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நடைபெற்ற பாரிய பேரணியினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. காலி மாவட்ட எம்.பி.கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
ஹம்பாந்தோட்டை
பெலியத்தை பகுதியில் ஓழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட மதத் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கண்டி
தலதா மாளிகைக்கருகில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னர் கண்டி நகரில் எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. பிக்குமார் உட்பட பெருமளவு மக்கள் இதில் பங்கேற்றனர்.
வடக்கு
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் வட மாகாண ஆளுநர் ஜி. எ. சந்ரசிரி, யாழ். சு.கா. அமைப்பாளர் அங்கஜன் உட்பட பெருமளவு தமிழ் மக்கள் கலந்துரையாடினர். பேரணி முடிவில் யு. என். டி. பி. அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. மன்னாரில் நடந்த பேரணியில் மீனவர்கள் உட்பட பலர் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.
ஹுனைஸ் பாரூக் தலைமையில் பேரணி நடைபெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்களில் நடந்த பேரணிகளிலும் அதிகமான தமிழ் மக்கள் பங்குபற்றினர். இலங்கை மீதான வெளிநாட்டுத் தலையீட்டைக் கண்டித்து அவர்கள், பெற்ற சுதந்திரத்தை மீளப்பெற இடமளிக்க முடியாது என்று கோஷமிட்டனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சட்டத்தரணிகள் சங்கம் ஐ.நா. அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்தனர்.
நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டதோடு இன்றும் பேரணிகள் தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.