மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினுள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள பிரதி மேயரின் அலுவலக அறையினுல் வைத்து மாநகரசபை உறுப்பினர் ஒருவரால் பூட்டப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை தொடர்பான முரண்பாடு காரணமாகவே இந்த குழப்பநிலையேற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளை தெரிவித்தார்.
இது ஒரு அடாவடித்தனமான செயல் என கண்டித்துள்ள அவர், இது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கேட்டபோது,
இது மாநகரசபையினுள் நடந்த சம்பவம் என்றபடியால் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையினை மாநகர முதல்வர் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
இதுதொடர்பில் தாங்கள் முழுமையான அவதானிப்பில் இருப்பதாகவும் இதற்கு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்,
மாநகர பிரதி மேயர் ஜோர்பிள்ளையை அவரது அலுவலக அறையினை மாநகரசபை உறுப்பினர் தவராசா பூட்டியதானது பிழையான விடயம். இது தொடர்பில் பிரதி முதல்வர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.