ஐநாவின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் நடைபெறும் விடயங்கள் குறித்தும் சர்வதேச சமூகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்தும் தமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் ஜெனீவா கூட்டத்தில் ஆராயப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் குறித்து சர்வதேச ரீதியாக தமது கட்சி விளக்கமளித்துள்ளதாகவும் அவை குறித்து சர்வதேச சமூகம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.