தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் பங்குபற்றுவார்களாயின், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டி வரும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் இது தொடர்பாக மேலும் கூறுகையில் :
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2001 ஆம் மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தாம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் புலிகளின் ஏகபிரதிநிதிகளாகவே தாம் பாராளுமன்றம் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதனால் இந்நாட்டில் புலிகள் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தும், ஊனங்களுக்கு உட்படுத்தியும், சொத்துக்களை அழித்தும் இருக்கின்றார்கள். இவர்களில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் சமூக, அரசியல் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆகவே இவற்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டி வரும்.
புலிகளால் படுகொலை செய் யப்பட்ட தமிழ் மக்களினதும், அரசியல் தலைவர்களினதும் உறவினர்கள் ஜெனீவா சென்றி ருப்பதாக அரசாங்கத்திற்குத் தகவல்கள் கிடைத்திருக்கி ன்றன. இவர்களுக்குத் தமிழ் கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டி வரும். அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த போது மனித உரிமை விவகாரத்தில் விசேட கவனம் எடுத்தது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி இருக்கின்றது. இதனை உலகமே அறியும்.
புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளால் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உடல் ஊனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இப்பாதிப்புகளுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் மாத்திரமல்லாமல் தென் பகுதி மக்களும் முகம் கொடுத்துள்ளார்கள்.
இலங்கை மத்திய வங்கி, மத்திய பஸ் தரிப்பு நிலையம், காத்தான்குடி பள்ளிவாசல், தெஹிவளை ரயில் நிலையம், அநுராதபுரம் மகாபோதி விஹாரை போன்ற மக்கள் கூடுகின்ற பல முக்கிய இடங்களில் புலிகள் தங்கள் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதனை யாவரும் அறிவர்.
இவ்வாறு மனங்களைக் காயப்படுத்தும் குரூர செயல்களை புலிகள் நிறையவே மேற்கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் மறந்து அமைதியாகவும் ஒன்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்களாக அழிக்கப்பட்ட பிரதேசங்களை துரிதமாகக் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு பாரிய அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை யாவருமே அறிவர் என்றார்.