தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று நாளாந்தம்மக்களை உசுப்பேற்றுவதுடன், அபிவிருத்திக்காக வரவில்லை தமிழ் பேசும்மக்களின் உரிமைக்காகவே அரியாசனம் ஏறினோம் என்று குறிப்பிடும் தமிழ் தேசியகூட்டமைப்பு தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை திரும்பிப் பார்க்கவேண்டும்.
தமிழீழம் தான் ஒரே தீர்வென்று மாகாண சபை முறைமையினை வடகிழக்கு இணைந்திருந்த போதே வேண்டாமென்று உறுமியவர்கள் கிடைத்த வாய்ப்பையெல்லாம் விட்டு விட்டு இலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளச்செய்துவிட்டு காலம் கடந்த ஞானமாக மாகாண சபை முறைமைக்கும், பொலிஸ், காணி அதிகாரங்களுக்கும் குரல் கொடுப்போம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். 3 ½ வருடங்களாக பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டுமென்று மாகாண சபையின் ஆளும் தரப்பில் இருந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்றைய காலகட்டத்தின் தேவையுணர்ந்து வடகிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாண சபையின் பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுத்து 1 ½ மாதங்கள் கடந்தும் பதில் கூற முடியாதளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதென்றால் அவர்களிடம் நிலையான கொள்கை எதுவும் இல்லையென்பதையே இது வெளிக்காட்டுகின்றது என்பதை அவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
60 வருடங்கள் அரசியல் அனுபவத்துடன் இருந்து தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தால் அழுகுரல்களும், வேதனைகளும் தான் மிச்சமாக இருக்கும். ஆனால் 3 ½ வருடங்களில் கிழக்கு மக்களின் கல்வி, கலை, கலாசார, பொருளாதாரம் உட்பட அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவருகின்ற தலைமைத்துவமாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கே பதில் போட முடியவில்லை என்றால் மக்களுக்கு எதனை செய்து கொடுக்க விளைகின்றனர். மீண்டும் தமிர்களின் வாழ்வில் துயரத்தைப் பெற்றுக்கொடுக்கவா விளைகின்றனர் என்ற சந்தேகத்தையே இது தோற்றுவிக்கின்றது.
நாடு நகரச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்ட வேளையில், ஆளும் அரசுடன் இணைந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற கட்சி என்ற அதிகாரத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழவினரான நாங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து நாடு நகரச் சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் குறித்து எடுத்துரைத்தோம். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளருடன் விளக்கம் கோரினார். ஆளும் அரசுடன் இணைந்திருக்கும் போது உங்களது கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்ற கிழக்கு முதலமைச்சர் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையில் நாங்கள் அதனை திருத்தங்கள் செய்ய வேண்டுமென திருப்பியனுப்பியுள்ளோம். இதனை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு வீரவசனம் பேசியிருந்தால் நடத்தியிருக்க முடியாது. இதன் மூலம், ஆளும் அரசுடன் இணைந்து அபிவிருத்திக்காகவும், உரிமைக்காகவும், குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என அனைத்து மக்களும் உணர்ந்திருப்பார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தான். 18.02.2012 நடைபெற்ற ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.