2/10/2012

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து வாஹிட்டுடன் ஜனாதிபதி மஹிந்த உரையாடல்

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட், தற்போதைய ஜனாதிபதி மொஹமட் வாஹித் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
மாலைதீவில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் மாற்றம், அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருக்கின்ற பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி இருவருடனும் பேசியதாக ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
நேற்றுக்காலை புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹித்துடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை நேற்று நண்பகலளவில் முன்னாள் ஜனாதிபதி நiட்டுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், அவரது பாதுகாப்பு குறித்துக் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் பாதுகாப்புக் கருதி இலங்கை வந்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கை வந்துள்ள நiட்டின் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனைப் பணித்துள்ளார்.மாலைதீவு முழுவதும் கலவரம் பரவிவரும் நிலையில் பதவி விலகிய அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. என்றாலும் அவர் கைது செய்யப்படமாட்டாரென புதிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறினார்.
எனினும் எந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என நiட்டின் மாலைத்தீவு ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான் நாளை சிறைப்படுத்தப்படுவேன் என மொஹமட் நiட் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய மொஹமட் நiட் ஆதரவாளர்கள் நேற்று நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் பரவி வரும் நிலையிலேயே நiட் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக தான் துப்பாக்கி முனையில் பதவி விலக்கப்பட்டேன் என மொஹமட் நiட் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அந்நாட்டின் பல தீவுகளிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக கலவரம் வெடித்தது.
எனினும், அமைதியான ஊர்வலத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக மாலைதீவு ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அடிப்படையில் ஒடுக்கப்படும் என மாலைதீவு பொலிஸார் நேற்று முன்தினம் இரவு அறிவித்திருந்தது.
எனினும் மாலைதீவின் பிரதான தீவான தலைநகர் மாலேயில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் ஒரு சில மணி நேரங்களில் ஏனைய தீவுகளுக்கும் பரவியது. இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மொஹமட் நiட் மீதும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு சில பொலிஸ் நிலையங்களும் தாக்கப்பட்டதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தீவுகளில் ஒன்றான அத்துவில் 300 இராணுவத்தினரும் ஆயுதம் தரித்த பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 7 தீவுகளில் நேற்றைய தினத்தில் கலவரம் வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மொஹமட் நiட்டுக்கு அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று பிற்பகல் பிடியாணை பிறப்பித்துள்ளது. எனினும் எந்த குற்றத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால், நiட் மீது 14 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தமக்கு விபரம் கிடைக்கவில்லை என்றும் மாலைதீவு ஜனநாயக கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது-
இந்நிலையில் நேற்று மாலை நiட் அவரது வீட்டில் இருந்தவாறு ஊடகங்களுக்கு கூறியதாவது, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் முன்னாள் ஜனாதிபதியாக சிறைப்படுத்தப்படவிருக்கிறேன் என குறிப்பிட்டார்.
மாலைதீவில் என்ன நிகழ்கிறது என்பதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் உடன் நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். நாளை (இன்று) சிறைப்படுத்தப்பட்டு விடுவேன் என்று நiட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை மாலைதீவில் பரவிவரும் கலவரத்தை கட்டுப்படுத்த அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் புதிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஓய்வுபெற்ற கலோனல் முகமது நkமை பாதுகாப்புத் துறை அமைச்சராக புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் அஹமட் நியமித்துள்ளார். அத்துடன் உள்துறை அமைச்சராக வழக்கறிஞர் முஹமது ஜமீல் அஹமத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு அமைச்சரவையை நியமிக்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால் கலவரத்தை அடக்குவதற்காக 2 அமைச்சர்கள் மட்டும் அவசரமாக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவிவரும் மாலைதீவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் ரொபட் பிளேக் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியூலான்ட் தெரிவித்துள்ளார். வொஷிங்டன் பத்திரிகையாளர் சந்திப்பில் நியூலான்ட் கூறியதாவது, துப்பாக்கி முனையில் மொஹமட் நiட் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருப்பது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொபர்ட் பிளேக் மாலைதீவு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணத்தில் மாலைத்தீவு புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட்டுடன் பிளேக் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இதேபோன்று இந்த விவகாரம் குறித்து கவனத்துடன் இருப்பதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ஹன்கின் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நiட் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் ராய்ட்டருக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. விசேட தூதுக் குழு அடுத்தவாரம் மாலைதீவு செல்லும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment