கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள வேளையிலும் நேற்று சிலாபம் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த வேளையில் பொல்லுகளாலும், தடிகளாலும், வாள்களுடனும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர். ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டவேளை சிலாபம் மீனவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார்.
மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
சிலாபம் கடற்கரை வீதிக்கு அருகே நேற்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாம் கடற்கரை வீதியிலுள்ள பொலிஸ் அத்தியட்சகரினதும், சிலாபம் நீதிவானினதும் உத்தியோக இல்லத்திற்கருகே மீனவர்கள் முன்னேறி வர முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை சிலாபம் கடற்கரை வீதி மீன் சந்தை என்பன வெறிச்சேடிக்கிடந்தன.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பையும் மீறி கற்களால் தாக்கியவாறு முன்னேற்றிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் வளவுக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினர். பாதுகாப்பு உத்தியோகத்தரும் தாக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கலகம் அடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.
கலகக்காரர்களை பின்வாங்கச் செய்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். கலகக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. கலகக்காரர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்ட வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக சிலர் தெரிவித்தனர்.
எனினும் துப்பாக்கிப் பிரயோகம் எவ்வாறு இடம்பெற்றது என்பது பற்றிய தீவிர விசாரணைகளில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நமது புத்தளம் மாவட்ட குறூப் நிருபரும் சிறு காயங்களுக்குள்ளானார். கலகத்தை அடக்குவதற்காக பொலிஸார் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டொன்றை எடுத்து பொலிஸாரை நோக்கி வீச முற்பட்ட ஒருவரின் கையிலேயே புகைக்குண்டு வெடித்ததில் வலது கையில் பலத்த காயங்களுக்குள்ளானார்.
சிலாபம் மஹாவெல்ல என்றழைக்கப்படும் கடற்கரை பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய எண்டனி பெர்ணான்டோ (வயது 38) என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சிலாபம் நகர சபைத் தலைவர் ஹிலரி பிரசன்ன, கடற்கரை தேவாலயத்தின் பங்குத்தந்தை மற்றும் சிலாபம் பேராலய பங்குத்தந்தை ஆகியோர் கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
அரசு கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதை மீனவர்கள் விரும்பவில்லை. மானியம் என்பதற்கு சிறிதும் தாம் இணங்கப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் சிலாபம் கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நேற்று மாலை 6.00 மணியளவில் சிலாபம் மறை மாவட்ட பேராயர் அதிவணக்கத்துக்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை சிலாபம் கடற்றொழிலாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து சிலாபத்தில் ஒரு பதற்ற நிலை உருவாக்கியுள்ளது.
0 commentaires :
Post a Comment