சிரிய விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிரிய படையின் வன்முறைகள் குறித்து தீர்வொன்றுக்கு வரும்படி பாதுகாப்புச் சபை நாடுகளிடம் அழைப்பு விடுக்கப்போவதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவில் தமது கட்டுப்பாட்டை இழந்துள்ள ஜனாதிபதி பஷர் அல் அசாத் உடன் பதவி விலக வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்க அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் அல் அரபி மற்றும் கட்டார் பிரதமர் ஹமத் பின் ஜஸ்ஸிம் அல்தானி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இதில் பஷர் அல் அஸாத் பதவி விலகும் அரபு லீக் தீர்வுத் திட்டத்தை ஆதரித்து சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு நபில் அல் அரபி பாதுகாப்புச் சபையை கோரவுள்ளார்.
அத்துடன் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர்களை அனுப்பியுள்ளது.
இதன்படி பஷர் அல் அசாத்தை பதவி விலகக்கோரும் அரபு லீக் தீர்வுத் திட்டத்தை ஏற்குமாறு சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றுவதற்கு மேற்கு நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனினும் இவ்வாறான தீர்வுத் திட்டத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான ரஷ்யா எச்சரித்துள்ளது.
அரபு லீக் தீர்வுத் திட்டத்தின்படி பஷர் அல் அஸாத் தனது அதிகாரங்களை துணை ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினரையும் இணைத்து தேசிய ஐக்கிய அரசொன்றை அமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்தை சிரிய அரசு நிராகரித்துள்ளது. எனினும் குழப்பமான தீர்வுகளை தோல்வியடையச் செய்வோம் என சிரிய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் குழப்பத்தை விளைவிக்கும் நாடுகளின் அறிக்கைகளுக்காக வருந்தமடைகிறோம். இந்த நாடுகள் தமது முட்டாள்தனமான முயற்சிகளை மத்திய கிழக்கில் பரிசோதிக்கிறது என்று சிரிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அதேபோன்று ரஷ்யாவும் தீர்வுத் திட்டத்தை விமர்சித்துள்ளது. இது சரிசமமான தீர்வல்ல என கூறியுள்ள ரஷ்யா, இதன் மூலம் சிரியாவில் நேரடி வெளிநாட்டு தலையீட்டுக்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.
அத்துடன் சிரிய விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு சிரிய அரசுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இந்த அழைப்பை எதிர்ப்பாளர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்நிலையில் அரபு லீக் தீர்வுத் திட்டத்திற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 அங்கத்துவ நாடுகளில் 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றும் வாக்கெடுப்புக்கு விட குறைந்தது. 9 நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளுள் ஒன்றேனும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரிக்க முடியும். முன்னதாக சிரியாவுக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோவால் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிரியாவில் தொடர்ந்து வன்முறைகள் நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையின் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமை மாத்திரம் 95 பேர் கொல்லப் பட்டதாக அரச எதிர்ப்பாளர்கள் குழுவின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஹோம்ஸ் நகரில் மாத்திரம் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் டெராவில் 15 பேரும் டமஸ்கஸ் சபாப் நகரில் 6 பேரும் பலியாகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வரும் செய்திகளை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment