2/21/2012

19ஆவது ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்: அமைச்சர் ஜீ.எல். ஜெனீவா பயணம்: ஏனையோர் இன்றும் நாளையும்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று ஜெனீவா பயணமானார்.
இலங்கையில் இருந்து சுமார் 52 பேர் கொண்ட தூதுக் குழு கலந்து கொள்ளவுள்ளது. இலங்கைக் குழுவிலுள்ள ஏனைய அங்கத்தவர்கள் இன்றும் நாளையும் ஜெனீவா பயணமாக உள்ளனர்.
19 ஆவது ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை நடத்துமாறு யோசனை கொண்டு வர சில மேலைத்தேய நாடுகள் தயாராவதால் அந்த சவால்களை வெற்றிகரமாக முகம்கொடுக்கும் வகையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பலமான தூதுக் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று அதிகாலை விசேட விமானம் மூலம் ஜெனீவா பயணமானார்.முன்னாள் சட்டமாஅதிபர் மொஹான் பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன அடங்களான குழுவினர் இன்று செல்லவுள்ளதோடு அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் நாளை ஜெனீவா பயணமாக உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனையை முறியடிப்பது குறித்து ஆராய கடந்த வாரம் ஜெனீவா சென்றிருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த சனியன்று நாடு திரும்பியிருந்தார்.
இதேவேளை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று கூடி ஆராய்ந்தனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கைக்கு எதிரான சகல சவால்களையும் வெற்றிகரமாக தோற்கடிக்க இலங்கைத் தூதுக் குழு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்காக அரசாங்கம் சிறப்பாக தயாராகி வருவதாக கூறிய அவர் இது தொடர்பில் இலங்கைக் குழு நட்பு நாடுகளுடன் பேச உள்ளதாகவும் கூறினார். இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment