ஆரையம்பதி விவேகாநந்தர் சிலை சேதம்: பசீர் ஷேகுதாவுத் கண்டனம்
ஆரையம்பதி பிரதேசத்தில் விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இனம் என்று பார்க்காமல் குழப்பவாதிகள் என்றே பார்க்க வேண்டும்.
இந்த செயலை குழப்பவாதிகளே செய்துள்ளனர் இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவுத் தெரிவித்தார்.
நாட்டில் சிலைகள் உடைக்கப்படும் கலாசாரம் இருந்த குழப்ப நிலையும் அமைதியின்மையும் நீங்கி இன உறவு மேம்படுத்தப்பட்டுவரும் இன்றைய சூழ்நிலையில் இந்த செயலை செய்தவர்களை ஒரு இனம் என்று பார்க்காமல் குழப்பவாதிகள் என்றே பார்க்கவேண்டும்.
இனங்களை குழப்பும் குழப்பவாதிகளே இவ்வாறான செயல்களை செய்கின்றனர். இதற்காக ஒரு இனத்தின் மீது பழியை போட்டு விடக்கூடாது.
இஸ்லாம் ஒரு போதும் இவ்வாறான செயல்களை அங்கீகரிப்பதில்லை. சிலைகளை வணங்க வேண்டாமென்றே இஸ்லாம் கூறுகின்றதே தவிர மற்றய மத்தின் சிலையை உடைக்குமாறு இஸ்லாம் ஒரு போதும் கூறவில்லை.
இவ்வாறான செயல்களை ஒரு இனத்தின் தலைமேல் போட்டு விட்டு இன ஒற்றுமையை சீர் குலைக்க யாரும் முற்படக்கூடாது.
இன ஒற்றுமையும் சகோதரத்துவமும் நம்மிடையே மிக முக்கியமானதாகும்.
சுவாமி விவேகானந்தர் உலகம் அறிந்த ஒரு அறிஞர். சகல மதங்களாலும், சமய சகத்தலைவர்களாலும் மதிக்கப்பட்ட ஒரு பெரியார் என பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவுத் மேலும் தெரிவித்தார்.ஆரையம்பதி விவேகானந்தர் சிலை சேதம்: பிரசாந்தன், அஸ்பர் கண்டனம்
ஆரையம்பதி பிரதேச எல்லையில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பு. பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி முயற்சியாகவே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை காத்தான்குடிப்பக்கமாக இருந்து ஒரு மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் இந்த உருவச்சிலையினை சேதப்படுத்தியுள்ளனர்.
யார் இதைச்செய்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் என்பவரின் போதனைகளை தமிழ் மக்களுக்கு மாத்திரம் சொந்தமானவையல்ல அவர் சகல மதங்களினாலும் மதத்திலைவர்களினாலும் போற்றப்படுகின்ற ஒருவர்.
அவரின் உருவச்சிலை ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்த உருவச்சிலை வைக்கப்பட்டு ஒரு சில தினங்களே ஆகுகின்றன.
தற்போது இந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இன ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான சதி வேலைகள் இடம் பெற்றுவருகின்றன.
அதில் ஓரு நடவடிக்கையாகவே இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதையும் நாம் பார்க்கின்றோம் என பிரசாந்தன் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கருத்து தெரிவிக்கையில் யார் இதை சேதப்படுத்தியிருந்தாலும் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
உரியவர்களை அடையாளப்படுத்தி பொலிசார் கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இந்த உருவச்சிலையானது ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது இந்த செயலை யார் செய்திருந்தாலும் அதை காத்தான்குடி நகர சபையும் நானும் வன்மையாக கண்டிப்பதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.
ஆரையம்பதி விவேகாநந்தர் சிலை சேதம்: ஹிஸ்புல்லாஹ் கண்டனம்
இன்று அதிகாலை ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர்எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்போவிற்கு தெரிவித்தார்.
அந்த உருவச்சிலை அமைந்துள்ள இடத்திற்கு முன்னாலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரவு வேளை கடமையாற்றிய ஒரு வரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கூறினார்.
இன நல்லுறவை சீர்குலைக்க திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இதை கருத வேண்டியுள்ளது.
யார் இந்த செயலை செய்திருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் விசாரணை குழுவொன்றை அமைத்து துரிதமான விசாரணையை மேற்கொளுமாறு பொலிசாரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளேன்.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை குலைப்பதற்காக இந்த செயலை தீய சக்திகள் செய்துள்ளனர். இவ்வாறான செயல்கள் இடம் பெறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
பொலிசார் தீவிரமாக விசாரணை செய்து உரியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் வேதனைகளை தெரிவிப்பதுடன் எனது கண்டனங்களையும் தெரிவிக்கின்றேன் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்தார்
.நன்றி காத்தான்குடி.இன்போ
0 commentaires :
Post a Comment