1/17/2012

எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான் மீதான தடைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வளைகுடா நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு எதிராகவே ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய சட்ட மூலத்தில் ஈரான் மத்திய வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரான் சர்வதேச எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் ஈரானின் எண்ணெய்க்கு தடைவிதிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத்தடை குறித்த இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் அளவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடைகளால் சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈரான் உள்ளது. சவூதிக்கு அடுத்ததாக ஈரான் அதிகபட்சமாக நாளொன்று 2.5 மில்லியன் பெரஸ் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம் ஈரான் ஒரு தவணையில் 75 பில்லியன் டொலர்களை எணணெய் ஏற்றுமதி மூலம் பெறுகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நிவர்த்திக்கும் வகையில் தமது உற்பத்தி அதிகரிக்கப்படும் என சவூதி அரேபிய எண்ணெய் துறை அமைச்சர் அலி அல் நைமி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் வளைகுடா நாடுகள் தம் மீதான தடைக்கு ஆதரவாக தமது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் ஈரான் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிவரும் என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஒரு நட்பு ரீதியான செயலாக ஈரான் பார்க்காது என குறிப்பிட்டுள்ள ஒபெக் அமைப்புக்கான ஈரான் தூதுவர், ஈரான் எண்ணெய்க்கு பகரமாக வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தி செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த நாடுகள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்றார்.

0 commentaires :

Post a Comment