1/05/2012

அமெரிக்க யுத்த கப்பல் திட்டமிட்டபடி ஹொர்முஸ் துறைமுகத்தினூடாக பயணிக்கும்

ஈரான் எச்சரிக்கைக்கு பென்டகன் பதில்
அமெரிக்க போர்க் கப்பல்கள் திட்டமிட்ட அட்டவணைப்படி ஹொர்முஸ் நீரிணையூடாக பயணிக்கும் என அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது .
மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க போர்க் கப்பல்கள் மீண்டும் தனது வளைகுடாவில் உள்ள படைத் தளத்திற்கு திரும்ப முடியாது என ஈரான் இராணுவத் தளபதி விடுத்த எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே பென்டகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஜோர்ஜ் கெர்னி கூறும்போது; அமெரிக்க கடற்படையின் வளைகுடா செயற்பாடுகள் சர்வதேச சட்டத்திற்கு அமைய நடைமுறைப் படுத்தப் படுகிறது. கடல் வர்த்தக பாதுகாப்பிற் காகவும், அரசுகளின் ஸ்திரத்தன்மைக் காகவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அமெரிக்க கடற்படையின் மிகப் பெரிய யுத்தக் கப்பல்களுள் ஒன்றான யு. எஸ். எஸ். ஜோன் சி ஸ்டெனிஸ் யுத்த கப்பல் கடந்த வாரம் வழமையான பாதையில் ஹொர்முஸ் துறைமுகத்தை தாண்டி ஓமான் துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த கப்பல் மீண்டும் ஈரான் கடல் எல்லையான ஹொர்முஸ் துறைமுகத்தினூடாக பஹ்ரைனிலுள்ள அமெரிக்க படைத் தளத்திற்கு திரும்பவுள்ளது. எனினும் ஈரான் வெளியிட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க யுத்தக் கப்பல் தனது வழமையான கடற்பாதையில் செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தினால் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதன் நெருக்கடியால் இவ்வாறு செயற்படுகிறது என்று பென்டகன் கூறியுள்ளது. ஈரான் சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப் பட்டதால் அது உள்நாட்டில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.
இதனை திசை திருப்பும் வகையில் இவ்வாறான எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிடுவதாக வும் பென்டகன் ஊடகப் பேச்சாளர் கெர்னி குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment