தமிழ் காங்கிரஷ் , தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய வடிவமே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். பிரபல மேதாவி பொன் அருணாச்சலம் தொடங்கி அமிர்தலிங்கம் வரையிலான மிகப்பெரும் தலைமைகள் வழிநடாத்திய அரசியலையே இன்றைய தமிழ் கூட்டமைப்பும் அதன் தலைமையும் பிரதிபலிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஐம்பது வருட அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி என்று போற்றப்படுகின்றார். தலைமை என்பது வல்லமை வாய்ந்ததாக இருப்பது மட்டும் அல்ல நல்லெண்ணம் கொண்டதாகவும் இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒரு இனத்தை, ஏன் ஒரு நாட்டினையே வழிநடத்தும் பொறுப்பினை இந்த அரசியல் தலைமைகளே கையகப்படுத்தி இருக்கின்றனர். அப்படியானதொரு பொறுப்பு வாய்ந்த ஷ்தானத்தில் அமர்ந்திருப்பவர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாகும்.
அதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறு என்பதும் காலாகாலமாக யாழ் மேலாதிக்கத் தலைமைகளால் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கின்றது. நல்லையா இராசதுரை, தங்கதுரை, அஷ்;ரப் என்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவங்களுக்காக தமது அரசியல் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் பலர். அவர்களின் அந்த ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் பிரதிபலிப்புகளில் இருந்து அந்த ஆளுமைகளின் தொடர்ச்சியாக உருவானதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பொறுப்பில் இருக்கும் சந்திரகாந்தன் அவர்களுமாகும். அதற்கு மேலாக கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்கின்ற வரலாற்றுக் கடமையை ஏற்றிருப்பவர் சந்திரகாந்தன்.
கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ தமிழரின் அரசியல் அபிலாசைகள் பேச்சுவார்த்தைகள் ஊடாக மட்டுமே தீர்க்கப்பட்டாகவேண்டும் என்பதே புலிகளின் அழிவுக்குப்பின்னரான இன்றைய யதார்தமாகும். இதனை புரிந்துகொண்டதனால்தான் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றிருந்த நிலையில் பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகதலைவனாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அரசுடன் மாகாணசபைகளுக்கான காணி, பொலிஷ் அதிகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது தமிழீழத்தை தவிர மற்ற எதையும் ஏற்றுக்கொள்வது தமிழ்தேசியத் துரோகம் என்று இதே கூட்டமைப்பினரே சர்வதேசம் எங்கும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்துவந்தனர்.
கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பங்கெடுக்காமல்
புறக்கணித்தவர்கள் இன்று வடமாகாணசபை ஒன்றை உருவாக்குவதற்காக அரசிடம் தவம் கிடக்கின்றனர். இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக கடமையேற்ற காலத்தில் இ;ருந்து மாகாணசபைகளுக்கான காணி மற்றும் பொலிஷ் அதிகாரங்கள் வழங்கப்பட்டாக வேண்டும் என்று சந்திரகாந்தன் தனித்து நின்று குரலெழுப்பி வருகின்றார். தாம் இல்லாத மாகாணசபைக்கு தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியாமல் போன கிழக்கு மாகாணத்திற்கு, அதிகாரங்கள் வழங்கப்பட்டால் என்ன? வழங்கப்படாவிட்டால் என்ன? என்கின்ற மாற்றாந்தாய் மனப்பாங்கிலேயே அனைத்து தமிழ் தலைமைகளும் இதுவரை மௌனம் காத்துவந்திருக்கின்றன.
இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அரசுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமைப்பினர், வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணசபைக்கான காணி மற்றும் பொலிஷ் அதிகாரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசுடனான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றனர். அரசு கூட வட கிழக்கு மாகாண இணைப்பு என்பதைத் தவிர காணி பொலிஷ் அதிகாரங்கள் பகிர்வு விடயத்தில் தனது இறுக்கத்தைத் தளர்த்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியாவும் எதிர்பார்ப்பது போல இக்கோரிக்கைகளை தமிழ் கட்சிகள் ஒருமித்து முன்வைக்கின்ற வேளைகளில் 13 வது திருத்தச்சட்;டத்தை முழுமையாக அமூல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் புலப்படுகின்றன. அதேவேளை மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பற்றிய எந்தவொரு கோரிக்கைகளுக்கும் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபைகளுக்குள் இருந்து வெளிப்படுத்தப்படுகின்ற குரல்களே மேலும் வலுச்சேர்க்க முடியும். எனவேதான் யுத்தத்திற்கு பின்னரான சமாதான முயற்சிகளில் முக்கியமானதொரு காலகட்டமாக இன்றைய காலகட்டம் அமைந்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பங்களை தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து சாணக்கியமாக பயன்படுத்துகின்ற பட்சத்தில் அதிகாரப் பகிர்வு விடயங்களில் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைகள் மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்டேனும் தீர்த்து வைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
இதனடிப்படையில்தான் தமிழ் மக்களின் நீண்டகாலப்பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை சாத்தியப்படுத்துவதற்கான எத்தனங்களில் ஒன்றாகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எழுதியிருக்கின்ற கடிதம் அமைந்திருக்கின்றது. அக்கடிதத்தில் அவரும் அவரது கட்சியும் கொண்டிருக்கும் கொள்கையின் அடிப்படையில் வடக்குடன் கிழக்கு மாகாணத்தினை இணைப்பதற்கான கூட்டமைப்பினரின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளாத போதும் மற்றைய காணி பொலிஷ் அதிகாரங்களை கோரும் விடயத்தில் தாம் முழுமையாக உடன்படுவதாக தெரிவித்திருக்கின்றார். அதேவேளை வடக்கு கிழக்கு இணைப்பின் சாத்தியமின்மை பற்றிய விடயம் பற்றி கூட்டமைப்பினருடன் தாம் பேசத் தயாராய் இருப்பதாகவும் அக்கடிதம் குறிப்பிடுகின்றது.
தமிழ் சமூகத்துள் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஆதிக்கங்கள், ஒடுக்கமுறைகள் போன்ற அகமுரண்பாடுகள் பற்றி நமக்குள்ளேயே ஆழமான உரையாடல்களும், புரிந்துணர்வுகளும் தேவை என்பதன் அவசியத்தை முதலமைச்சரின் இக்கோரிக்கை விளம்பிநிற்கின்றது. அதனை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுப்பதோ கூட்டமைப்பின் சுதந்திரத்தின் பாற்பட்டது. ஆனால் கிழக்கு மாகாண மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற முதலமைச்சர் பதவி வகிக்கின்ற ஒருவரிடமிருந்து எழுதப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இக்கடிதத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை அணுகிய விதம் ஆரோக்கியமானதொன்றல்ல. இதுபோன்றதொரு கடிதத்திற்கு நேடியாக பதிலிறுப்பதுதான் அரசியல் பண்பாடாக இருக்கமுடியும். ஆனால் சம்பந்தன் அவர்களோ பினாமி பெயர்களில் ஒழிந்துகொண்டு அக்கடிதத்தினை திரித்து துரோகக்குற்றச்சாட்டுகளுடன் பதிலளித்திருக்கின்றார். ஐம்பது வருட அனுபவங்கள் கொண்ட அரசியல்வாதி, மூத்த அரசியல் தலைவர் யாருக்குமே தெரியாத அநாமதேய அமைப்பொன்றின் பெயரில் பதிலளித்திருப்பதானது ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் செயற்பாடாக இருக்க முடியாது. தீவிரவாத அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகளுமே இப்படியான அநாமதேய பிரசுரங்க@டாக தமது கருத்துகளை வெளிப்படுத்துவதுண்டு. கடந்த காலங்களில் புலிகள் அதனையே செய்துவந்தனர். எல்லாளன் படை, சங்கிலியன் படை என்று தேவையான தருணங்களில் எல்லாம் துரோகக் குற்றச்சாட்டுகளுக்கும் மிரட்டல்களுக்கும் பினாமிப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அகிம்சை போதித்த தந்தை செல்வாவின் பெயரை வைத்து அரசியல் செய்கின்ற சம்பந்தன் அவர்கள் பயங்கரவாதிகளின் பாணியில் ஒரு முதலமைச்சரின் கடிதத்திற்கு பதிலளித்திருக்கின்றமையானது இன்னும் இன்னும் புலம்பெயர் வாழ் புலிப்பினாமிகளின் கைப்பொம்மையாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவதையே காட்டுகிறது. சம்பந்தன் அவர்கள் காடுகளுக்கும் மறைந்திருந்து அரசியல் செய்பவர் அல்ல. பினாமி பெயர்களில் உலாவரவேண்டிய அவசியம் ஏன்? உள்ளத்தில் நேர்மையும், நாவினிலே வாய்மையும் இருந்தால் முதலமைச்சரின் கடிதத்திற்கு அவர் நேர்மையாக பதிலளித்திருக்க வேண்டும். ஒரு முக்கியமானதொரு வரலாற்றுச் சூழலில் கிழக்கு மாகாண மக்களின் சுயாட்சி இறைமை பாராதீனப்படுத்தப்பட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் கடிதத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ள விதம் கடுமையான கண்டத்திற்கு உரியது.
மீன்பாடும் தேனாடான்
25-01-2012
0 commentaires :
Post a Comment