1/12/2012

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மாகாணசபையில் இருந்து வெளிநடப்பு

கிழக்கு மாகாணத்தில் காணிப்பிழக்குகள் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் முகீன் கொண்டு வந்த பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சனையில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் ஆகிய மூன்று இனமக்களும் சிக்குண்டுள்ளார்கள். இதில் மூன்று இனங்களுக்கும் நியாயம் கிடைக்கப்படவேண்டும். பத்திரிகைகளில் அறிக்கை விடுவதனாலேயோ கன்சட்டில் பதிவதனாலேயோ இப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை.
மாறாக சமூகங்களுக்கிடையே வீண் மனக்கசப்புக்களே உருவாகும். எந்த அளவு முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றதோ அதே அளவுக்கு தமிழ் மக்களின் காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக உறுதியுள்ள தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அன்று பயங்கரவாதம் என்ற போர்வையில் காணிகள் பறிக்கப்பட்டது. இன்று அரசியல் அதிகாரம் என்ற ரீதியில் காணிகள் சுவீகரிக்கப்படுவது இனங்களுக்கிடையே வீண்முறுகலை ஏற்படுத்தும். அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரினாலும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இனங்களுக்கு இடையிலான சமாதானம் சீர்குலையும். இதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.
ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் கட்டியாளவும் முற்படக்கூடாது. நீண்ட கால எல்லை பிரச்சனையின் விளைவாக ஆரையம்பதி காத்தான்குடி பிரதேசத்தில் இந்து வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுவதும் சீர்குலைக்கப்படுவதும் இதன் மூலம் இன உறவை குழப்பி சில அரசியல் தலைமைகள் குளிர்காய முற்படுவதும் எதிர்காலத்தில் உகந்த சூழலை ஏற்படுத்தாது. ஆரையம்பதி எல்லை பிரதேசத்தில் வைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திட்டமிட்ட முறையில் சேதமாக்கப்பட்டுள்ளது மிகுந்த கவலையினை அளிக்கிறது. ஒரு சிலரின் தவறு ஒட்டுமொத்த சமூதாயத்தை சீர்குலைக்கும். அன்று தமிழ் தலைமைத்துவம் விட்ட தவறு தமிழ் சமுதாயத்தை சீர்குலைத்தது. அதே போல் இஸ்லாமியர் என்று கூறிக்கொண்டிருக்கும் சிலரின் தவறு அனைத்து சமூகத்தையும் சீர்குலைக்க இடம்கொடுக்க கூடாது.
இதில் அரசியல் தலைமைகள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். உலகின் சிறந்த வழிகாட்டியாக இருந்த விவேகானந்தரின் சிலை உடைக்கப்பட்டது ஒட்டு மொத்த இந்துக்களின் மனோநிலையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை நினைவு கூந்தவனாக மிகவிரைவில் காணிப்பிணக்கு தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றினை அமைக்க வேண்டும். விவேகானந்தரின் 149வது ஜனனதினமான இன்று விவேகானந்தரின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து மாகாணசபையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றேன் எனக் கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

0 commentaires :

Post a Comment