கிழக்குமாகாணத்தில் தற்போது பொதுவாக ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் பெரும் குழப்பமான நிலை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு எல்லை மீறி சென்றிருக்கின்றது. காரணம் சொல்லவே தேவையில்லை. இடமாற்றப்பிரச்சினைதான். ஆசிரியர்களுக்கான இடமாற்றமானது புள்ளித்திட்ட அடிப்படையில் வரையப்பட்டிருந்தமையானது மிகவும் சிறப்பானதொரு முடிவாகவே எல்லோராலும் நோக்கப்பட்டது.
ஆனால் பிரச்சினை எங்கே வெடித்திருக்கிறதென்றால், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களின் இடமாற்றத்தில்தான். மாகாண கல்விப்பணிமனையில் இருந்து மட்டக்களப்பு ஆசிரியர் ஒருவருக்கு திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைத்திருந்தது. ஆனால் அவர் தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் மூலமாக இடமாற்றத்தை இரத்துச்செய்துள்ளார். அதேபோன்று சில ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்தை வாய்ப்பாக பயன்படுத்தி விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். விடயம் அறிந்த ஆசிரியர்களின் ஒரே புலம்பல் “ வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வேண்டியவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்கள். ஆனால் எங்களின் நிலைதான் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது” என்பதுதான். முதலமைச்சரிடம் மேன்முறையீட்டுக்கு சென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை தகுந்த காரணங்களால் நிறைவேற்ற மறுத்தமை பாராட்டுக்குரிய விடயமே.
இதில் என்ன வேடிக்கையென்றால் அவர்கள் அனைவரும் அதிகாரிகள் மூலமாக தங்களது கோரிக்கையை வென்றெடுத்துவிட்டார்கள். இந்தவிடயம் திரிபடைந்து, முதலமைச்சரால் என்னத்துக்கு இயலும்? என்று ஆசிரியர் ஒருவர் ஏளனமாக கேட்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இது கிழக்குமாணத்திற்கு ஏற்பட்டுள்ள மிகவும் அபாயகரமான சாபக்கேட்டின் ஆரம்பமாகும். “நியாயமான முறையில் இடமாற்றங்கள் இடம்பெறவேண்டும். அதில் நான் எந்த குறுக்கீடும் செய்யமாட்டேன்” என்று கிழக்கு முதல்வர் கூறியமையையிட்டு நாம் பெருமையடைகிறோம். அதேவேளை அதிகாரிகள் மூலம் முதல்வரின் சிந்தனை சின்னாபின்னமாக்கப்படுவதையிட்டு பெரும் வேதனையடைகிறோம். இது கல்வித்திணைக்களத்தில் மட்டுமல்ல ஏனைய அனைத்து திணைக்களங்களிலும் இந்நிலைமை பரவலாக காணப்படுகிறது.
எனவே இந்த கறைபடிந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கிழக்கு முதல்வர் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் இந்த பிரச்சினைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் குறிப்பிட்ட அதிகாரிகளின் மனமாற்றத்தினால் மட்டுமே முடியும். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு கிழக்கு புத்திஜீவிகளிடம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக நாம் உணர்கிறோம். விரைவில் இதற்கான தீர்வை முதல்வர் வரையாவிட்டால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும் தீர்க்க முடியாமல் போகும் என்பதே திண்ணம். ஒரு நிருவாக கட்டமைப்பில் அடிமட்டத்தில் செய்யப்படும் தவறு அதன் தலைமையே தாக்கும் என்பதை கிழக்கின் நிலைமை எடுத்தியம்புகின்றது. ஒரு சில அதிகாரிகளின் தவறு நல்ல அரசியலையும் தலைவர்களையும் சாக்கடைக்குள் தள்ள முனைவது விபரீதத்தின் உச்சமே. “எல்லோரும் சமம்” என்கின்ற கொள்கையே நல்லாட்சியின் அடையாளம். இவ்வடையாளத்தை நிலைநிறுத்த கிழக்கு முதல்வர் என்ன செய்ப்போகின்றார் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்போம்.
எம்மக்கள் மத்தியில், மிக நீண்ட காலத்திற்கு பிற்பாடு அரசியல் அறிவுடன் நல்ல பாதையில் பயணிக்கின்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இது நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது அவாவாகும். அணைக்கட்டு பலமாக இருக்கின்றபோதும் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் அரிப்பு முழு அணையையுமே அழித்துவிடும். அதிகாரிகளின் இச்செயற்பாடு அணையின் அரிப்புக்கு ஒப்பானதே. விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்…..
மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு – கிழக்கிலங்கை
0 commentaires :
Post a Comment