சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்
சிங்கப்பூரில் அதன் பிரதமர் லீ சியன் லூங் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புதிய சம்பள வீதங்களின் அடிப்படையில் அவர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்களில் இந்தப் பெரிய வெட்டு அமலுக்கு வருகிறது.
அந்தக் குழு நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் அவர்களின் சம்பளம் 36 சதவீதம் குறைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன்படி அவரது ஆண்டுச் சம்பளம் இனி 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைகிறது.
இருந்த போதிலும் அவர்தான் உலகிலேயே தேர்தெடுக்கப்பட தலைவர்களில் அதிக ஊதியம் பெரும் தலைவராக இருப்பார். அவரது சம்பளம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சம்பளத்தைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலானது.
பராக் ஒபாமா ஆண்டொன்றுக்கு நான்கு லட்சம் டாலர்களே சம்பளமாகப் பெறுகிறார்.
சிங்கப்பூர் அரசால் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளின் படி, அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் பிரதமரைப் போலவே 36 சதவீதம் குறையும். அவர்களின் ஆண்டுச் சம்பளம் இனி எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்களாக இருக்கும்.
அரசின் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தாலும், இது குறித்து இருவார காலம் விவாதங்கள் நடைபெறும் என்றும், பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகள் அதிகப்படியான இடங்களை வென்ற பிறகு அரசு கடும் அழுத்தத்துக்கு உள்ளான நிலையில், கடந்த மே மாதம் பிரதம் லீ இந்த சம்பள ஆய்வுக் குழுவை நியமித்தார்.
அந்தத் தேர்தலின் போது தீவு நாடான சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே, செல்வ நிலைகளில் உள்ள வித்தியாசம் வாக்காளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
0 commentaires :
Post a Comment