1/03/2012

வவுணதீவு பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யக் கோரி இன்று காலை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முறைகேடான இந்த இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி 22 கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கங்களினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நான்கு மணி நேர ஆர்ப்பாட்டத்தின் பின் அவ்விடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதோடு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அபேயகோன் உடன் முதலமைச்சர் தொடர்புகொண்டு நிலைமைகளை விளக்கினார்.
இதை அடுத்து ஒரு மாதம் இடமாற்றம் பிற்போடப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ‘அரசாங்க சட்டதிட்டத்திற்கு அமைவாக இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில் ஒருவர் இடமாற்றப்படலாம்.
ஆனால் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் இரண்டு வருடமே சேவையாற்றி நிலையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிய இவரின் இடமாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. குறுகிய சில நோக்கங்களுக்காக இவ் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை என்னால் உணர முடிகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் இதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்’ என்றார்.

0 commentaires :

Post a Comment