இந்தியாவின் நிலைப்பாடு இதுவென அமைச்சர் கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு
இனங்களுக்கிடையே நல்லுறவுடனான 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா போரினால் பாதிப்புக்களை எதிர்கொண்ட வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் கூறினார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் பொது நூலகத்திற்கு முன்பாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இந்திய உதவியுடன் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடமாகாணத்தில் யாழ்ப்பாணப் பகுதிக்கு வருகைதந்தமையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இங்கு வந்தேன். இந்தப் பகுதி மக்களாகிய நீங்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்துள்Zர்கள். துன்பங்களை அனுபவித்தீர்கள். ஆனால் இன்று இந்தப் பகுதியில் அமைதிநிலை காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் நீங்கள் எதிர்கொண்ட துன்பங்களை நன்கறியும். உங்களுக்கு உரித்தானது எது என்பது குறித்து இந்திய அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது.
உங்களுடைய நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அயல்நாடு என்ற வகையிலும் இலங்கைக்கு நாம், எம்மால் இயன்ற உதவிகளைச் செய்கின்றோம். 280 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதன்கீழ் 49 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. பயனாளிகள் தெரிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் இலங்கையின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். இன்று 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கவிருக்கின்றோம்.
மேலும் காங்கேசன்துறை துறைமுகத்தினுடைய அபிவிருத்தியும் 19 மில்லியன் டொலர் பெறுமதியில் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் ஊடாக கப்பல் போக்குவரத்து சீரடைந்துள்ளதுடன் மீனவர்களும் நன்மை அடைந்துள்ளனர் என்றார்.
அதேநேரம், யாழ் அரியாலை பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் 48 வீடுகள் இந்திய வெளியுறவு அமைச்சரால் உத்தியோகபூர்வமாகப் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டது. இந்தியாவின் நிதியுதவியுடன் முதற்கட்டமாக வடபகுதியில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 வீடுகள் அரியாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளுக்கான உறுதிகளை எஸ்.எம்.கிருஷ்ணா பயனாளிகளிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாத் பதியுதீன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம். வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி. யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
0 commentaires :
Post a Comment