12/28/2011

சில கல்வி அதிகாரிகளின் செயலால் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த கல்விச் சமூகம்

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய குறைபாடுகளும், குளறுபடிகளும் இருப்பதாக ஆசிரியர் சமூகம் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பதுடன். ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியிருக்கின்றனர்.

உண்மையிலேயே இவ் இடமாற்றம் பாரிய குறைபாடுகளையும் குளறுபடிகளையும் கொண்டிருக்கின்றது. பல ஆசிரியர்கள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக கஸ்ரப்பிரதேசங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் கடமையாட்டிய பல ஆசிரியர்கள் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கும் அதி கஸ்ரப் பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் அதிகாரிகளின் குடும்ப உறவினர்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பட்டிருப்பு கல்வி வலயத்திலே பாரிய குளறுபடிகள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த கல்வி அதிகாரியின் குடும்ப உறவினர்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கல்வி அதிகாரியின் உறவினர்கள் அண்மையில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உறவினர்கள் இடமாற்றம் செய்யப்பட பாடசாலையில் இருக்கின்ற ஆசிரியர்கள் அதிகஸ்ர மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.பல வருடங்களாக 5 வருடங்களுக்கு மேலாக அதி கஸ்ர மற்றும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பலர் இவ் இடமாற்றத்தில் உள்வாங்கப்படமல் இருக்கின்றனர்.

இவ் இடமாற்றம் தொடர்பில் நான் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றேன் என்று யாராவது என்னை குற்றம் சாட்டினால் பெயர் விபரங்களுடன் ஆதாரத்துடன் உண்மையான விபரங்களையும் வெளியிட நான் தயங்கப் போவதில்லை.

இது ஒருபுறமிருக்க கிழக்கு மாகாண கல்விச் சமூகம் எனும் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டிருக்கின்றது அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை அப்படியே தருகின்றேன்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றமானது பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என முழுக் கல்விச் சமூகமும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளனர். எனவே மேற்படி இடமாற்றத்தில் இடம்பெற்ற குறைபாடுகளாக...

01. கஸ்ரப் பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் கஸ்ரப் பிரதேச பாடசாலைகளில் அதுவும் வெளி மாவட்டங்களில் எதுவித விடுதி வசதிகளுமற்ற பாடசாலைகளில் மத கலாசார விடயங்களில் மாறுபட்ட முஸ்லீம் பாடசாலைகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை.

02. கணவன் ஒரு மாவட்டத்திலும் (அம்பாரை) மனைவி இன்னொரு மாவட்டத்திலும் (கிண்ணியா மூதூர்) இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சொந்த வாழ்விடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதனால் இவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் இவர்களை தங்கி வாழும் இவர்களது பெற்றோர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகவுள்ளது.
03. இவ் இடமாற்றம் செய்யும்போது அதிகாரிகளதும் அதிபர்களினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் இவ் ஆசிரியர் இடமாற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.

04. இவ்விடமாற்றத்தின்போது பதில் கடமை புரிவதற்கான எந்த ஒழுங்கு முறையும் இடம்பெறவில்லை. கஸ்ரப்பிரதேசத்தில் வேலை செய்யவில்லை எட்டு வருடம் பூர்த்தி செய்துள்ளனர் என்ற காரணங்கள் காட்டப்பட்டு இடமாற்றம் இடம்பெற்றாலும் பதில் கடமை ஒழுங்குகள் செய்யப்படவில்லையாதலால் பாதிக்கப்படுவது மாணவர்களே.

05. இவ் இடமாற்றம் க.பொ.த (உத) வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உயர்தர வகுப்பின் புதிய கல்வியாண்டிலே இடம்பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கும் ஜனவரி மாதத்திலேயே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் பதில் கடமை இல்லாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பாதிக்கப்படுவது மாணவர்களே ஆகும்.

06. இலங்கையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான சுற்று நிரூபம் பொதுவானதாகும். இங்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகளினதும் அதிபர்களினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப இடமாற்றம் இடம்பெறும்போது தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வாழ் நாள் பூராகவும் ஒரே பாடசாலைகளில் அதுவும் நகரப் பாடசாலைகளில்கடமையாற்றுவது பெரும் குறைபாடாகும்.

07. இடமாற்றத்தின்போது பாடவாரியான ஆசிரியர் சமப்படுத்தல் இடம்பெற வேண்டும் ஆனால் இவ் இடமாற்றத்தின்போது ஆசிரியர் சமப்படுத்தல் இடம்பெறவில்லை. சில பாடசாலைகளில் பாடங்களுக்கு மேலதிக ஆசிரியர்களும் சில பாடங்களில் பற்றாக்குறை நிலவுவது இவ் இடமாற்றத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

08. இவ் இடமாற்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தொடக்கம் பாடசாலை அதிபர்வரை இதில் சம்பந்தப் படுவதனால் இவ் ஆசிரியர் இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமது மனக்குறையை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். காரணம் ஒரு அதிகாரியிடம் முறையிடும்போது இன்னொரு அதிகாரியே இதில் சம்மந்தப்ப்டுள்ளார் என தப்பிக் கொள்ளும் நிலையும் இவ் இடமாற்றத்தில் காணப்படுகிறது.

09. இவ் ஆசிரியர் இடமாற்றம் புள்ளித்திட்ட அடிப்படையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும் இப் புள்ளித் திட்டம் இதுவரை பகிரங்கமாக வெளிப்படுத்தப் படாமையும் இவ் இடமாற்றத்தின் குறைபாடாகும்.

10. சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களின் nhதழிற்சங்கம் இவ் இடமாற்ற சபைகளில் இடம்பெற வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படாமையால் சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை இவ் இடமாற்றத்தின் குறைபாடாகும்.

11. இவ் இடமாற்றத்தின் போது சில பாடசாலைகளில் ஒரே நேரத்தில் பல ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யும்போது பதில் கடமை இல்லாத நிலையில் பாதிக்கப்படுவது அப்பாடசாலையின் கல்விச் சமூகமாகும்.
எனவே மேற்படி குறைபாடுகளால் தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை உடனடியாக தடுத்தி நிறுத்தி மேற்படி குறைபாடுகளை போக்கும் முகமாக ஆசிரிய இடமாற்றத்தினை வழங்குமாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 commentaires :

Post a Comment