12/29/2011

பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் உருவாக்கியுள்ள தகவல்தொழில்நுட்ப கண்டு பிடிப்பிற்கு பாராட்டு

பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் உருவாக்கியுள்ள தகவல்தொழில்நுட்ப கண்டு பிடிப்பிற்கு பாராட்டு
(பபித்)
தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறு எமது கிராமிய விவசாய துறைக்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கில், விவசாயிகள் பயிர்களை விலங்குக ளிலிருந்தும், பறவை களிலிருந்தும் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட இலத்திரணியல் ( ரோபோ) வெருளிப் பொம்மை ஒன்றைபட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவன் சிவஞானம் பிரசன்னா உருவாக்கியுள்ளார்.
இப் பொம்மை விவசாயி எங்கிருந்தாலும்சரி தனது கையடக்க தொலைபேசியில் இருந்து அழைப்பை (Miss call) ஏற்படுத்தும் போதெல்லாம் பொம்மை ஒலி எழுப்பி கையை அசைத்து செயற்படும். இதே போன்று பாதுகாப்பு முறைமை (Securaty Sisytem) ஒன்றும் அம்மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி வாய்ந்த உடமைகள், ஆவணங்கள் பேணப்படும் அறைகளில் இம் முறைமையைப் பொருத்தி விட்டால் யாராவது இங்கு நடமாடினால் அங்கிருக்கும் கையடக்க தொலைபேசி ஒன்று தன்னிச்சையாக இயங்கி பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தும். இக் கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கமரா வசதி உள்ளவையானால் அங்கு நடமாடியது யாரெனவும் கண்டுகொள்ளலாம்.
இம்மாத முற்பகுதியில் கல்வி அமைச்சினால், இன்ரல் நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அனுசரணையுடன் கொழும்பு பண்டாரநாயக்கா மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தகவல்தொழில்நுட்ப, வர்த்தக கண்காட்சியில் அகில இலங்கை ரீதியாக புதிய தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களில் முன்னோடியாக விளங்கும் 20 பாடசாலைகள் பங்கு பற்றின.
இதில் மட்டக்களப்பு பட்டிருப்பு, தேசிய பாடசாலை மாணவனின் கண்டுபிடிப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் பங்குபற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் இதனைப்பாராட்டினர்.
இக்கண்காட்சியின் போது இன்னும் பல தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஆக்கங்கள் பட்டிருப்பு, தேசிய பாடசாலையின் மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலையின் ஆசிரியர்களான வி.ரவிந்திரமூர்த்தி, சி.கோகுலராஜ், எ எம் பறுக் ஆகியோரும் மாணவர்களான சி.பிரசன்னா, ஜெ. மோகவர்மன், அ.அகிலன், வி.கனிஸ்கன் ஆகியோரும் கண்காட்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
நன்றி  புதியவிடியல் **

0 commentaires :

Post a Comment