12/25/2011

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நத்தார் பண்டிகை வாழ்த்து செய்தி.


நத்தார் பண்டிகை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நத்தார் பண்டிகை வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். உலக மாந்தர்களின் பாவங்களை போக்குவதற்காக மாந்தருடன் தருமத்தை நிலைநாட்டி, தியாகத்தை வெளிப்படுத்தவும் தன்னையே மெழுகாக்கி உலகுக்கு ஒளி தந்த யேசு பாலகன் பிறந்த தினமானது கிறிஸ்த்தவ பெருமக்களுக்கு மாத்திரமின்றி உலக மக்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான பண்டிகையாக விளங்குகின்றது.
புனித வைபிள் கூறுவது ‘உமக்காக நான் பாரம் சுமக்கின்றேன்’ என்பதற்கிணங்க மனித குலத்தின் பாவங்களையும், கறைகளையும், அறியாமையையும் போக்க தன்னையே சிலுவையாக்கிய அந்த மனிதகுலத்தின் உன்னத ஒளிவிளக்கு அவதரித்த இத்தினமானது மனித சமூகத்திற்கு ஒரு தத்துவத்தை எடுத்தியம்புகின்றது.
இன்றைய உலகில் அரசியல் அதிகாரங்களுக்காகவும், மத வெறியினாலும், சுயநலத்தின் பேரிலும் பிற சமூகத்தின் உரிமைகளையும், அபிலாசைகளையும் தர மறுக்கின்றவர்களுக்கு மனித குலத்தின் பாவத்திற்காக தன்னையே அர்ப்பணித்து யேசுபிரான் பலவாறு முன்மாதிரியாக காட்டிநிற்கின்றார். பிற சகோதரரின் அபிலாசைகளை மதிக்கவும், அவர்களது உரிமையை கொடுக்கவும், அவர்களுக்காக விட்டுக்கொடுப்பு செய்யவும் அற்புதமான வழிகாட்டல்களை யேசு பிறப்பு உணர்த்தி நிற்கின்றது.
ஆட்டு தொழுவத்தில் புனித மரியாளின் புதல்வனாய் உதித்த அப்பாலகனின் ஒளி அன்றைய அறியாமையில் இருந்தும், மேலாதிக்க அடக்கு முறையிலிருந்தும் மனித குலத்திற்கு வழிகாட்டியது போல இன்றைய உலகிலும் நவீன ஒடுக்கு முறைக்கும், சகோதர மேலாதிக்கத்தில் இருந்தும் விடுபெற யேசு பிரானின் வாழ்வு வழிகாட்டி நிற்கின்றது. அவ் அதி உன்னத தினமானது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்லாமல், வாழ்வியல் சமூகத்திற்கும் நல்ல மாற்றங்களை வேண்டிநிற்கும் அனைவருக்கும் பொதுவானதாகும்.
எமது நாட்டின் வெடிசப்தங்கள் குறைந்து, மரண ஓலங்கள் குறைவடைந்த நிலையில் அமைதியானதும், சுதந்திரமானதுமான முறையில் இவ் நத்தார் பண்டிகையானது நிரந்தர சமாதானத்தையும், அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்ட ஒரு களமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் நத்தார் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மா
காண முதலமைச்சர்.

0 commentaires :

Post a Comment