12/22/2011

தமிழ்க் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்

* தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு ஒத்துழைப்பு அவசியம்
* இ.தொ.கா, மு.கா போன்று இணைந்து சேவை செய்யலாம்
* தெரிவுக்குழுவில் கூட்டமைப்பும் இருக்க வேண்டும்
* மீள்குடியேற்றம் முடிந்ததும்வடக்கில் மாகாணசபை தேர்தல்
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அரசாங்கத்துடன் இணைந்து அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்து சுமார் இரண்டு மணிநேரம் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ளும் போக்கை எல்.ரி.ரி.ஈ.யுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து இவ்வமைப்பு எல்.ரி.ரி.ஈயை விட மோசமான முறையில் நடந்து கொள்கின்றது என்றே நான் நினைக்கின்றேன்.
எல்.ரி.ரி.ஈ. சில சந்தர்ப்பங்களில் விரும்பியோ, விரும்பாமலோ அல்லது வேறு ஏதாவது ஒரு சுயநல நோக்கத்துடனோ யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கூட அரசாங்க தரப்பினருடன் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்தது. அவ்வப்போது யுத்த நிறுத்த உடன்படிக்கைகளை செய்து கொண்டு திடீரென்று போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டது. அன்று எல்.ரி.ரி.ஈ. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள் என அகங்காரத்துடன் செயற்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் பறைசாற்றுகின்ற போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடன் தான் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்ற தவறான மனப்போக்கில் செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் நன்மைக்காக அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கம் மேற்கொள்ளும் நற்பணிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி தங்களை ஆதரித்து வாக்களித்த தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு
நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நியமிக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியமாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் கூடிப் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது. அதனால், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்ய முடியுமென்று பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் பத்திரிகை பிரதம ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய போது தெரிவித்தார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் ஒரு விவாதம் நடத்தப்படுமா? என்று ஒரு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அவ்விதம் விவாதம் ஒன்று நடத்தப்பட்டால் அத்துடன் விசயம் முடிந்துவிடும். நான் தனிப்பட்ட முறையில் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தின் விசேட தெரிவுக்குழு ஒன்றின் மூலம் பரிசீலனைக்கு எடுத்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பலதரப்பட்ட யோசனைகள், சிபாரிசுகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை தெளிவாக ஆராய்ந்து ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் நியாயமான தீர்வை ஏற்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல் என்று நினைப்பதாக கூறினார்.
மாகாண சபைத் தேர்தலை வடக்கில் நடத்துவீர்களா என்று கேட்கப்பட்ட இன்னுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வடபகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் அரசாங்கம் உடனடியாக அங்கு மாகாண சபைத் தேர்தலை ஆணையாளரின் இணக்கப்பாட்டுடன் நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமும் அவரது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் தங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுகிறார்கள். அது போன்றே, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤ம் தங்களது மலையக மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்துடன் சேர்ந்து அந்த மக்களுக்கு மகத்தான பணியை செய்கிறார்கள். இதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடபகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியிருக்கிறது. இந்தத் தொகை நாட்டின் ஏனைய பகுதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள பணத்தில் இது 60சதவீதமாகும்.
இவ்விதம் மேற்கொள்ளும் வடபகுதிக் கான அபிவிருத்தி திட்டங்களுடன் வடபகுதிக்கான ரயில் பாதை அமைத்தல், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இலங்கையின் தேசிய மின்விநியோகத்தை இணைப்பதற்காக சுன்னாகம் வரை நேரடி மின் இணைப்பை, ஏற்படுத்தும் பணிகள் இன்னும் ஒன்றரை வருடங்களில் பூர்த்தி செய்யப்படும்.
அத்துடன் வடபகுதிக்கான தூய்மையான குடிநீர்த்திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை அமைப்பதற்காக மேலதிகமாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றார்.
மேலும் தரைக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி பற்றி விளக்கிக் கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொதுவாக 12 அங்குல ஆழத்தில் தான் கண்ணிவெடிகள் புதைக்கப்படும். அவற்றை அரசாங்கம் வெளிநாட்டு உதவியுடன் அகற்றிய பின் அங்கு மக்கள் வாழ்வதற்கான பாதுகாப்பு தொடர்பில் அதற்கான சான்றிதழை ஐக்கியநாடுகள் அமைப்பின் மூலம் பெற்ற பின்னரே அப்பிரதேசங்களில் மக்களை குடியமர்த்துவதற்கு அனுமதி அளித்தது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தனது இந்திய விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் வடபகுதியில் வீடுகளை அமைக்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு உடன்பட்டதென்றும், ஏற்கனவே, இதில் 800 வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் இருந்து திருகோணமலை செல்வதற்கு முன்னர் பல மணித்தியாலங்களை செலவிட வேண்டியிருந்தன. இங்கு மக்கள் 17 இடங்களை படகுகள் மூலமே கடந்து மறுபக்கத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இன்று அவ்விடங்களில் 17 புதிய பாலங்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதனால் சில மணி நேரங்களில் அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தாலும் இன்று அது மிகவும் குறுகிய காலத்தில் நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்று சிறப்பாக அபிவிருத்தி அடைந்துள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் வீடுகள் இப்போது படிப்படியாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்படு கின்றன. அரசாங்கக் காணிகளில் ஆயுதப் படைகளின் முகாம்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்டவர்களின் வீடுகளை ஆயுதப்படையினர் பயன்படுத்தினால் அதற்கான வாடகை உரிமையாளருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

0 commentaires :

Post a Comment