12/19/2011

வெள்ளையர் விருப்பப்படி இயங்கும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி - ஜனாதிபதி

நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பதில் தாம் ஒரு போதும் பின்வாங்கியதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அனு தினமும் நடந்த படுகொலைகளையும், கிராமங்கள் தோறும் தொங்கவிடப்பட்ட வெள்ளைக் கொடிகளையும் தடுப்பதற்காக நாம் யுத்தம் செய்து பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்தோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களில் நம்பிக்கை வைக்காது வெள்ளைக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திய யுகம் இப்போதில்லை. அந்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டைத் துண்டாடி அதில் ஒரு துண்டைக் கொடுப்பது தான் தீர்வு என எண்ணியவர்கள் அவர்கள் எனவும் தெரிவித்தார்.
மனித உரிமை மீறப்படுகிறது எனக் கூறி எகிப்தைப் போல அரசாங்கத்தை வீழ்த்த சதி நடக்கிறது. அது வெறும் பகல் கனவே எனவும் அவர் தெரிவித்தார்.
லிட்றோ கேஸ் நிறுவனத்தின் ஓராண்டு பூர்த்தியும், வர்த்தகர்கள் மற்றும் விநியோ கஸ்தர்களைக் கெளரவிக்கும் நிகழ்வும் கெரவளப்பிட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, பீலிக்ஸ் பெரேரா உட்பட அமைச்சர்கள், பிரதி யமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, சரத் பொன்சேகாவை உள்ளே வைத்துள்ளதில் சகலரும் பிரயோசனம் பெறப்பார்க்கின்றனர். அரசியல் இலாபத்திற்காக பெரும் பிரயத்தனம் எடுக்கின்றனர். மகாநாயக்க தேரர்களிடம் சென்றனர். அவர்கள் எதற்கு இதைச் செய்கின்றனர் என மக்களுக்குத் தெரியும். வதந்தி, சூழ்ச்சிகளுக்கு மக்கள் அகப்படக்கூடாது. பின்னோக்கி திரும்பிவிட வேண்டாம். நாம் இணைந்து முன்னேறு வோம். ஒரு போதும் பின்வாங்கக்கூடாது.
இந்த லிட்ரோ நிறுவனத்தின் சிறப்பு விருதினை அங்குணுகொலபெலஸ்ஸவில் உள்ள ஒரு வர்த்தகர் பெற்றுள்ளார். மகிழ்ச்சியாயுள்ளது. ஒரு காலத்தில் அங்கிருந்து கொழும்பு வருவதென்றால் எவ்வளவு கஷ்டம், எத்தனை மணித்தியாலம் எடுக்கும்'. இப்போது அந்த நிலை இல்லை. மதிய சாப்பாட்டிற்கு காலிக்கும் போகும் அளவுக்கு காலி வீதி அதிவேக மாக்கப்பட்டுள்ளது. இந்த நாடு முன்னேறி வருகிறது. அபிவிருத்திகள் தெளிவாக விளங்குகின்றன. சகல  சமூகங்களும் அதனுடன் முன்னேறி செல்ல வேண்டும்.
நாடு முன்னேறவேண்டும். நாட்டோடு சேர்ந்து மக்களும் முன்னேற வேண்டும். நேற்று துறைமுகத்தில் ஒரு நிர்மாணப் பணியை ஆரம்பித்துவைத்தேன். விந்தையை நோக்கி நாடு நகர்கிறது. இலங்கை வரை படத்தில் மாற்றங்கள் வந்துள்ளன. இது சிறந்த தருணம். நாட்டுக்கு நீங்கள் செய்யவேண்டியதை நிறைவேற்றுங்கள். நாளைய உங்கள் சந்ததிபற்றி சிந்தித்து முன்னேற்றத்தில் தடம்பதியுங்கள்.
மக்களுக்குப் பாரமாக நாட்டுக்குப் பாரமாக நட்டத்தில் இயங்கிய லிட்ரோ கேஸ் நிறுவனம் தற்போது இலாப மீட்டும் நிறுவனமாக மாறியுள்ளதுடன் முதலாவது வருட நினைவும் கொண்டாடப்படுகிறது.
இது அந்த நிறுவனத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்கும் பெருமை தருகிறது. புதிய உத்வேகத்துடன் லிட்ரோ நிறுவனம் இரண்டாமாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
பொது வளங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட யுகம் ஒன்றிருந்தது. இ.போ.ச., ச.தொ.ச. என பலவற்றைக் குறிப்பிடலாம். அரச ஊழியர்கள் பாதுகாக்கப்படாமல் அவர்கள் தொழிலிலிருந்து நீக்கப்பட்டனர்.
அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டபோது அதன் ஊழியர்கள் அச்சமடைந்தனர். ரூபவாஹினி, ஐ.ரி.என். போன்ற நிறுவனங்களை தனியார் மயப்படுத்த முற்பட்டபோது அதைக் கேள்வியுற்று பலர் இருதய நோயினால் பாதிப்புற்றனர். நாம் நாட்டின் வளங்கள், மக்கள் வளங்கள் எனப் பார்த்தே செயற்படுகிறோம். நான் தொழிலமைச்சராகப் பதவி வகித்தபோது தேயிலைத் தோட்டங்கள், ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றை தனியாருக்கு வழங்க முயற்சித்தமையை நாம் தடுக்க பெரும் கஷ்டப்பட்டோம்.
அதிகாரிகள், ஊழியர்கள் மீது நாம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அதனால் தான் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை பல இலட்சமாக அதிகரித்தோம். அதனால்தான் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தனியார் மயப்படுத்துவதை விட போட்டித் தன்மையுடன் செயற்படுவதே முக்கியம். இல்லாவிட்டால் நாம் அடிமைப்படுத்தப்படுவோம்.
கடந்த காலங்களில் தனியாருக்குக் கையளிக்கப்பட்ட நிறுவனங்களை நாம் மீள அரசுடமையாக்கியுள்ளோம். பொய்க ளுக்கு அதிக ஆயுள் இல்லை என்பது எனது நம்பிக்கை. நட்டத்தில் இயங்கிய இந்த கேஸ் நிறுவனத்தைக் கடந்த ஒரு வருடத்திற்கு முன் 63 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கு மீளப் பெற்றது. பல விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு நான் சளைக்கவில்லை. நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பதில் நாம் ஒருபோதும் பின்வாங்கவில்லை. யுத்தம், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்கியமை போன்றவை இதிலடங்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் இரண்டாவது சிறப்புப்பரிசினை மட்டக்களப்பு வர்த்தக நிறுவனம் பெற்றுக்கொண்டதுடன் நாடளாவிய ரீதியிலிருந்து பங்கேற்ற லிட்ரோ கேஸ் வர்த்தகர்களுக்கு விருதுகளும் பணப்பரிசில்களும் வெகுமதிகளும் பாராட்டுக்களும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment