12/16/2011

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நோக்கிய சிவில் சமூகத்தினது கோரிக்கை சாமானிய மக்களின் உளவிருப்புகளின் பிரதிபலிப்பு அல்ல.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.



அண்மையில் சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி ஒரு பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையானது கொண்டுள்ள விடயதானங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதோடு பொதுமக்களிடையே பெரும் குழப்பநிலையையும் தோற்றுவிக்கத்தொடங்கியுள்ளது.

முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மீள உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. நீண்டகால யுத்தத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அப்பாவி மக்களின் சின்னாபின்னமாக்கப்பட்ட வாழ்வு எதிர்காலம் மீதான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மெல்ல மெல்ல நகர ஆரம்பித்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தையும் வன்முறைக் கலாசாரத்தையும் மறந்து இலங்கையராக பெரும்பான்மையின மக்களுடன் ஐக்கியப்பட்டுவாழ தலைப்பட்டுள்ளனர். நாட்டில் குடிகொண்டிருந்த பகைமை உணர்வுகளும் இனக்குரோதங்களும் பழங்கதையாய்ப்போய் இனங்களிடையேயான பரஷ்பர புரிதலும் இன நல்லிணக்கமும் மேம்பட்டுவருகின்றன. இந்தநிலையில்தான் தமிழ் மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினைக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்பேச்சுவார்த்தைகள் இடையிடையே முறிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவருகின்றபோதிலும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் கூட்டமைப்பினர் அரசுடனான பேச்சுக்களை தொடர்ந்துகொண்டே வருகின்றனர். அதனைத் தொடர்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்பதை அமெரிக்காவரை சென்று களைத்துவிட்ட கூட்டமைப்பினரும் உணர்ந்துகொண்டதனால்தான் என்னவோ அரசுடன் பேசி இணக்கப்பாடு ஒன்றைக்காணும் முயற்சியில் கூட்டமைப்பினர் இறங்கியுள்ளனர் எனத் தெரிகின்றது. 

இதற்கிடையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைக் கூட்டுகின்றேன், அங்கே அனைத்து தமிழ் கட்சிகளும் ஒருமித்த தீர்வொன்றுடன் வந்து முன்வையுங்கள்;. அதை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று ஜனாதிபதியும் அடிக்கடி கூறியுள்ளார். இந்திய தரப்பும் அதையே வேண்டி நிற்பதாக அறிய முடிகின்றது. கடந்தகாலங்களில் ஜனநாயகப் பாதையில் பயணித்திருந்த தமிழ் கட்சிகள், அல்லது ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய தமிழ் கட்சிகள் ஏதாவது தீர்வை முன்வைக்கின்ற வேளைகளிலோ ஏற்றுக்கொள்ளுகின்ற வேளைகளிலோ அதற்கு புலிகள் முட்டுக்கட்டை போட்டு வந்திருந்திருந்தனர். அதி~;ட வசமாக அந்த இக்கட்டான நிலைமை இன்றில்லை. இந்த சூழலை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறைந்தபட்ச தீர்வில் தமிழ் கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படியானதொரு சூழலை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பினர் மனதார முன்வருவார்களா என்கின்ற கேள்விகள் ஒருபுறமிருக்க பெரும்பான்மையான மக்களின் உளவிருப்பம் அதைநோக்கியே காணப்படுகின்றது. அதை உணர்ந்துகொண்டதனால்தானோ என்னவோ கூட்டமைப்பினரும் அப்படியொரு தீர்வை நோக்கி நகரவேண்டிய நிலைமையில் இருக்கின்றர்கள்.

முதலில் தம்மோடு மட்டுமே அரசு பேசவேண்டும் என்று கூட்டமைப்பினர் புலிகளின் பாணியில் மார்பு தட்டிக்கொண்டாலும் அது ஜனநாயகத்துக்கு விரோதமான ஏகபிரதிநிதித்துவ கோரிக்கை என்பதனால் அதையிட்டு கூட்டமைப்பினரது இறுக்கம் நெகிழும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே நடத்தப்படப் போகும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுத்து முதலில் ஏதாவதொரு தீர்வினை ஏற்றுக்கொள்வதையிட்டு சிந்திப்பார்கள் என்று மக்கள் நம்பியிருக்கின்றனர். இதுவே எமது மக்களின் இன்றுள்ள அவசியத் தேவையுமாகும். 
இந்தநிலையில்தான் சிவில் சமூகத்தின் சார்பில் கூட்டமைப்பினரை நோக்கிய மேற்படி கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையானது கொண்டுள்ள கோரிக்கைகளின் சாராம்சம் பேச்சுவார்தைகளின் ஊடாக கூட்டமைப்பினருக்கும் அரசுக்குமிடையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்பட்டுவிடக்கூடாது என்பதை நோக்கியதாகவே காணப்படுகின்றது. மீண்டும் மீண்டும் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்று புலிகளின் பாணியில் பிரிவினைவாதக் கருத்துக்கள் மீது கட்டப்பட்டவையாகவே இக்கோரிக்கைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இவ்வாறான தூண்டுதல்களும், உருவேற்றுதல்களும் மென்மேலும் முரண்பாடுகளை வளர்க்கவே உதவும். தீர்வுகளை நோக்கி இருதரப்பினரும் நகரும் வாய்ப்பினை அது சீர்குலைக்கும்.
சிவில் சமூகத்தின் அரசியல் வெளிப்பாடுகள் என்பது ஒரு சமூகப்பொறுப்புமிக்கதாக மிளிரவேண்டும். அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி மக்களையும் கட்சிகளையும் நாட்டையும் வழிநடத்த அந்த வெளிப்பாடுகள் முயலவேண்டும். ஆனால் இங்கோ வெளியாகியுள்ள சிவில் சமூகத்தின் அறிக்கையானது இன்நோக்கங்களுக்கெல்லாம் எதிர்மாறானதொன்றாகவே காணப்படுகின்றது என்பதுதான் ஆச்சரியமாகும். 

சமாதானம் என்பதோ தீர்வு என்பதோ இருதரப்பினரதும் பரஷ்பர விட்டுக்கொடுப்புகளிலும், சமரசங்களிலும் இருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டியதொன்றாகும். அதைவிடுத்து விடாப்பிடியாக நிற்பவர்களால் ஆக்கப+ர்வமாக எதையுமே செய்யமுடியாது.  புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பினரை தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தீவிரவாத பிரிவினைக் கொள்கைகளுடனேயே அவர்கள் வழிநடத்தினார்கள். அதன்காரணமாகவே பேச்சுவார்த்தைகளில் தீhவுகள் எட்டப்பட முடியாமல் போயிற்று. பல பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் கொண்டுவரப்பட்ட தீர்வுப்பொதியில் இன்றைய மாகாணசபைகளைவிட கூடிய அதிகாரங்கள் அடங்கியிருந்தன. ஆனாலும் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பினரே அத்தீர்வுப்பொதியை நிராகரித்தனர். அன்று கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சந்திரிகாவின் தீர்வுப்பொதியை எதிர்த்திருக்காவிட்டால் அமைதியும், தீர்வும் எப்போதோ ஏற்பட்டிருக்கும். அது மட்டும் அன்றி அதன்பின்னரான எவ்வளவோ அழிவுகளும் இழப்புகளும் தவிர்க்கப்பட்டும் இருக்கும். அது போன்ற அரிய பல சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் நிராகரித்து வந்தமைக்கு புலிகளது தீவிரமான தேசியவெறியும், இறுக்கமான போக்குகளுமே காரணமாயின. புலிகளைப் பொறுத்தவரையில் வன்முறைமீதும் பயங்கரவாத நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கை கொண்ட அரசியல் ஞானசூனியங்கள் அவர்கள். அவர்களால் அப்படித்தான் வழிகாட்டமுடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இன்று வெளியாகியுள்ள கூட்டமைப்பினரை நோக்கிய அறிவுறுத்தல் கோரிக்கைகள் ஒரு சிவில் சமூகத்தின் பெயரால் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அன்றைய புலிகளது அறிவுறுத்தல்களுக்கும் இன்றைய சிவில் சமூகத்தினரது அறிவுறுத்தல்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடுகளும் தெரியவில்லை. எப்படியான ஆலோசனைகளையும் அறிவுறுதல்களையும் புலிகள் கடந்தகாலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கி எந்தவொரு சமாதானத்தையும் எட்டமுடியாதவாறு தவறாக வழிநடாத்தினார்களோ அதிலிருந்து சற்றேனும் பிசிறாமல் அதே பாணியிலான அறிவுறுதல்களே ஆனோசனைகள் எனும் பெயரில் இன்று இந்த சிவில் சமூகத்தினராலும் வழங்கப்பட்டிருக்கின்றன. 
இதற்கு முழு சான்றாக சிவில் சமூகத்தினரின் கோரிக்கைகளில் காணப்படும் தேர்தல் பகிஷ்கரிப்பு அறிவுறுதல்களைக் கொள்ளலாம். அதாவது வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் பட்சத்தில் அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அப்பட்டமாக கேட்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின் உயிர்நாடிகள் என்பார்கள் அரசியல் அறிஞர்கள். ஜனநாயக ஆட்சியொன்றின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாகவே தேர்தல்களும் வாக்களிப்புகளும் நடாத்தப்படுகின்றன. அத்தகைய தேர்தலை அதுவும் சுமார் 25 வருடங்களின் பின்னர் மறுக்கப்பட்டிருந்த வடமாகாண மக்களுக்கான அந்த வாய்ப்பினை பகிஷ்கரிக்கக் கோருவதென்பது நிட்சயமாக ஒரு சிவில் சமூகத்தினரின் பொறுப்புமிக்க கடமையாக இருக்கமுடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

இந்த நிலையில் வடகிழக்கு இணைப்பு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மாகாணத்தின் இயல்புநிலையை சீர்குலைக்கும் முயற்சியாகவே காணப்படுகின்றது. அதுமட்டும் அன்றி கிழக்குமாகாண மக்களின் இறைமைக்கு எதிரான கருத்தாகவே இதனை நாம் காண்கின்றோம். கிழக்கில் மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிளறிவிட்டு தமிழ் தேசியம், முசுலிம் தேசியம் என்ற குரோதங்கள் மீள எழுவதற்கு இந்த இணைப்புகோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசமாட்டார்கள்.
சுமார் அரைநூற்றாண்டு காலத்தால் உழுத்துப்போன வடக்கு - கிழக்கு இணைப்பு கோரிக்கையை தூசுதட்டி எடுத்து சிவில் சமூகத்தினர் எனும் பெயரில் மீண்டும் அரசியல் முக்கியத்துவம் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளமையானது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போடும் முயற்சியாகும். இவ்விணைப்பு கோரிக்கையானது காலமாகிவிட்ட கதை என்பதை கூட்டமைப்பினரும் புரிந்துகொண்டுள்ளனர் என்பதனால்தான் “பிரிந்த கிழக்கில் போட்டியிட மாட்டோம்” என்று  அன்று கூறியவர்கள், “கிழக்கு மாகாணசபை என்ற ஒன்றே எம்மைப்பொறுத்தவரை இல்லை” என்றவர்கள் இன்று தனித்த வடக்கு மாகாணசபைக்கு போட்டியிட தயாராகிவருகின்றனர். 

இன்று கிழக்கு அமைதிப் ப+ங்காவாக இருக்கின்றது. அபிவிருத்தியில் கிழக்கு முதல்வர் மன்னராக திகழ்கின்றார் என்று கூட்டமைப்பு எம்பி செல்வராசாவே புகழாரம் சூட்டியிருக்கின்றார். வடக்கும் கிழக்கும் அடாத்தாக இணைக்கப்பட்டிருந்த 22 வருடங்களும் உக்கிரமடைந்திருந்த தமிழ் - முசுலிம் குரோத நிலை இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனநல்லுறவு மேலோங்கியுள்ளது. 
இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைவு பற்றி மேற்படி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கையானது கிழக்கு மகாணத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் முயற்சியாகும். கிழக்கில்  மறைந்திருக்கும் தேசியவாத உணர்வலைகளை கிறளிவிட்டு தமிழ் தேசியம்,  முசுலிம் தேசியம் என்று குரோதங்கள் மீள எழ இந்த இணைப்புகோரிக்கை வழிவகுக்க நேரிடும். அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் யாரும் இன்றைய நிலையில் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது பற்றி பேசமாட்டார்கள். ஆனால் யேசுவின் பெயரால் சமாதானம் செய்யும் பேராயர் தலைமையிலான இந்த சிவில் சமூகத்தினர்  அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார்கள். தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்று சாமானிய மக்களின் வாழ்வியல் தேவைகளுக்கு குழிபறிக்கும் இவ்வரசியல் கோசங்களை இந்த சிவில் சமூகத்தினர் முன்வைத்திருப்பது மிகவும் வேதனைமிக்க செயலாகும். 


ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.
kilakku@hotmail.com

0 commentaires :

Post a Comment