12/13/2011

உண்மையான அரசியல் தீர்வை எட்ட உத்தேச தெரிவுக்குழு அரிய சந்தர்ப்பம்

தமிழ் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடு இனப்பிரச்சினைத் தீர்வை துரிதமாக்கும்
கூட்டமைப்பு உட்பட சகல கட்சிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அமைக்கப்படவிருக்கும் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வரவேண்டுமென ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதற்கு தமிழ் கட்சிகளுக்கிடையில் பொதுவான இணக்கப்பாடொன்று ஏற்படவேண்டியது அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை உணர்ந்து தெரிவுக்குழுவின் ஊடாக ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை அனைத்துத் தமிழ் கட்சிகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியிலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அமைச்சர், உண்மையான தீர்வொன்றை எட்டுவதற்கு உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு அரியதொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
தமிழ் பேசும் கட்சிகள், மலையகக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். உத்தேசப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகால முன்னோடி களில் நானும் ஒருவன் என்ற வகையிலும், இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்தவன் என்ற வகையிலும், நீதியான எமது உரிமைப்போராட்டம் ஏனைய தமிழ்த் தலைமையால் அழிவு யுத்தமாக மாற்றப் பட்டு எமது மக்களை பாரிய இன்னல் களுக்கு இட்டுச் சென்றிருப்பதால் ஆரம் பகால முன்னோடிகளில் ஒருவன் என்ப தால் இந்த அழிவுகளுக்கான தார்மீகப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்தி, உண்மையான, நம்பிக்கையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம். இவ்விடயத்தில் ஏனைய தமிழ் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வந்து உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்து பிரச்சினைகளை அங்கு பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளை நாம் வரவேற்கின்றோம். எனினும், இப்பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினர் உண்மையான முறையில், நம்பிக்கையுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். காலத்தை மேலும் இழுத்தடிக் கும் வகையிலான பேச்சுவார்த்தையாக இது அமைந்துவிடக் கூடாது. சில சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிக்கும் செயல்போன்றே தென்படுகிறது.
இவ்வாறில்லாமல் உண்மைத் தன்மை யுடன், நம்பிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் அரங்கை உருவாக்கி பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சந்தித்தோம். தேர்தலின் பின்னர் இது கூடவில்லை.
இந்த நிலையில் உத்தேச தெரிவுக்குழுவில் பங்கெடுத்து பிரச்சினைகள் பற்றிப் பேசித் தீர்த்துக்கொள்ள தமிழ்க் கட்சிகள் முன்வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் காணப்படும் இணக்கப் பாட்டை அரசாங்கத்தின் யோசனையாகத் தெரிவுக்குழுவில் முன்வைக்கத் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளார். எனவே இதனை தமிழ் கட்சிகள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்கமுடியுமென்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். அதன் பின்னர் அதற்கு அப்பால் செல்லலாம் என்ற எமது நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் நாம் வலி யுறுத்து வருகின்றோம். எல்லாம் வேண் டும் என்று அடம்பிடிக்காமல் முதலில் தருவதைப் பெற்றுக்கொண்டு எஞ்சிய வற்றைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண் டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர், -ஜி சிறந்ததொரு நடவடிக்கை. ஆணைக்குழுவின் சிபாரிசு அறிக்கை தற்பொழுது மொழிமாற்றம் செய்யப்படுவதாக ஜனாதிபதி கூறினார். மொழிமாற்றம் செய்யப்பட்டு கூடிய விரைவில் இவ்வறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதும் அங்கு விவாதங்களை நடத்தி அறிக்கையின் சிபாரிசுக்கு மேலதிகமான சிபாரிசுகளை பாராளுமன்றம் முன்வைக்கக் கூடும். இது தொடர்பான விவாதத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தமது கருத் துக்களை முன்வைக்க முடியும் என்றார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு விவாதிக்கத் தயார் என்றால், ஏன் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு விவா திக்க முடியாது என அமைச்சர் கேள்வி யெழுப்பினார்.
அதேநேரம், தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்த்துவைக்கப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழகத்துக்கு பொறியியல் பீடமொன்றை கட்டுவதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இதுபோன்று பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். நாம் கேட்கும் அனைத்தையும் அவர் செய்து தருகின்றார். நாம் வேண்டாம் வேண்டாம் என்று களைக்கும் வரைக்கும் உதவிகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி எமக்கு உறுதி வழங்கியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment