ரஷ்ய பொதுத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மொஸ்கோவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
ரஷ்யா பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் போட்டியிட்டன. அதில் புடின் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு 49.5 சதவீத வாக்குகளே கிடைத்தன.
அது கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது கிடைத்ததை விட சுமார் 15 சதவீத வாக்குகள் குறைவாகும். அடுத்த அண்டு (2012) அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
அதில் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் புடின் போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முறைகேடு மூலம் புடின் தனது கட்சியை வெற்றி பெற வைத்து விட்டார் என புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மொஸ்கோ நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது பிரதமர் புடினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. “புரட்சி ஓங்குக”, “புடின் இல்லாத ரஷ்யா வேண்டும்” என்பன போன்ற கோஷங்களை முழுங்கினர்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை பொலிஸார் கைது செய்தனர். 2வது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கிலும் போராட்டம் வெடித்தது. அங்கு 100 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்ததாக ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி தெரிவித்துள்ளது
0 commentaires :
Post a Comment