11/16/2011

ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் புதிய செய்தி அம்பலம்

ஈரான் இராணுவ தளத்தில் இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள இராணுவ தளத்தில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஈரான் இராணுவத்தில் ஏவுகணை பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் கொல்லப்பட்டார். ஆயுதங்களை இடமாற்றம் செய்யும் போது இந்த வெடிப்பு இடம் பெற்றதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு பின்னணியில் “மொசாட்” அமைப்பு இருப்பதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் உளவுச் செய்திகளை வெளியிட்டு வரும் அமெரிக்க ஊடகவியலாளர் ரிச்சர்ட் சில்வெஸ்டைன் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். இச் செய்தியை இஸ்ரேல் முன்னணி தினசரி பத்திரிகையான “யெடியொட் அரேனட்” வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம்

இதில் இஸ்ரேல் உளவுப் பிரிவான “மொசாட்” ஈரானில் இயங்கிவரும் முஜாஹிடின் இ-கல்க் என்ற ஆயுதக் குழுவுடன் இணைந்து ஈரான் இராணுவ தளம் மீதான தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது ஈரானின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணை தளத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த ஏவுகணை இஸ்ரேல் வரை சென்று தாக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட மேஜர் ஜெனரல் ஹஸன் மொகடாம் ஈரான் ஏவுகணை ஆய்வில் முக்கியமானவராக கருதப்படுபவராவார். இவரது மரணம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எஹுட் பராக் கூறும் போது, “இது போன்று மேலும் இடம் பெறும்” என்றார்.
ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து ஐ. நா. அறிக்கை வெளியிட்டு இரண்டு தினங்களுக்குள்ளேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றது. அத்துடன் இஸ்ரேலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் இராணுவ தளத்தின் மீது இதே போன்ற வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதில் இருவர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியிலும் மொசாட் இருப்பதாக அப்போது செய்திகள் அம்பலமானது. அதேபோன்று 2010 ஆம் ஆண்டு ஈரான் ஏவுகணைதளத்தில் நடந்த இதுபோன்ற வெடிப்புச் சம்பவத்தில் 18 பேர் பலியாயினர். இதே ஆண்டில் ஈரான் அணு விஞ்ஞானிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டதோடு மற்றுமொரு விஞ்ஞானி காயமடைந்தார். இவை அனைத்தும் மொசாட் அமைப்பின் கைவரிசையென ஊடக செய்திகள் கசிந்தன. இதேவேளை ஈரான் கணனிகளை இலக்குவைத்து ‘டுகு’ என்ற வைரஸ் பரப்பப்பட்டு வருவதாக ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுவும் இஸ்ரேலின் கைவரிசை என சந்தேகிக்கப்படுகிறது.

0 commentaires :

Post a Comment