இலங்கையிலுள்ள சகல மக்களும் தமது தனித்துவங்களைப் பாதுகாப்பதையும் ஒரே தேசமக்களாக வாழ்வதை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இதனை நேற்று மாலை சபையில் சமர்ப்பித்தார்.
ஆளும் தரப்பின் சிரேஷ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர். இது தொடர்பான பிரேரணை முன்னறிவித்தல்கள் நேற்றைய பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.
அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன வாசுதேவ நாணக்கார, டியூ குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பசில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், பாட்டளி சம்பிக ரணவக்க, டக்ளஸ் தேவானந்தா, அநுர பிரியதர்ஷன யாப்பா, ரி. பி. ஏக்கநாயக்கா, ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க பொ. பியசேன, ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரே இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கை மக்களுக்கு ஒரே தேச மக்களாக வாழ்வதற்கு அதிகாரமளிப்பதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் பற்றி பரிந்துரை செய்து அறிக்கை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற பெயரில் இந் தெரிவு குழு அமையவுள்ளது.
மக்களின் இத்தகைய ஐக்கியம் எல்லா மக்களினதும் நாட்டினதும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்தியை மேம்படுத்தும் என்பதாலும், அத்துடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் குரலாக இருப்பதனால், மேலே சொல்லப்பட்ட விடயங்களை நடைமுறைபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் செயற்பாட்டை நிர்ணயிப்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
எல்லா மக்களினதும் தனித்துவத்தை பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதையும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும், சமூக பொருளாதார அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு மக்களுக்கும் நாட்டுக்கும் அதிகாரமளிக்கவும் தகுந்த அரசியல் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் ஆறு மாத காலத்தினுள் பரிந்துரைப்பதற்கு இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுதல் வேண்டும் எனவும் இந்த பிரேரணையில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த தெரிவுக்குழுவும் அதன் தலைவரும் சபாநாயகராலேயே பெயர் குறிப்பிடல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 95 இன் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் இப்பாராளுமன்ற தெரிவுக்குழு 31 க்கு மேற்படாத எண்ணிக்கையிலான உறுப்பினர்களை கொண்டிருத்தல் வேண்டும் எனவும் குறித்துரைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் அதிகாரங்கள் மேற்படி பாராளுமன்ற தெரிவுக்குழு அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும், அது அவசியமென கருதும் எவரேனும் அத்தகைய ஆளை, அல்லது ஆவணங்களை வரவழைப்பதற்கும், அல்லது வரவழைக்கப்படும் எவரையும் சத்தியப் பிரமாணம் அல்லது உறுதி மொழியின் பேரில் விசாரணை செல்வதற்கும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இக்குழுவுக்கு துணை புரியும் பொருட்டு உரிய துறைகளிலுள்ள வல்லுநர்களினதும் நிபுணர்களினதும், சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும்.
காலத்திற்கு காலம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் தடைப்படாது தொடர்வதற்கும் காலத்திற்கு காலம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் இப்பாராளுமன்றம் தெரிவுக்குழு அதிகாரத்தை கொண்டிருந்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
0 commentaires :
Post a Comment