விந்தையின் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி
- கொழும்பிலிருந்து 3 மணி நேரத்தில் யாழ். செல்ல முடியும்
- எல்லைகள் சுருங்க பிரிவினைவாதம் இல்லாதொழியும்
- நவம்பர் 27: இருண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி
- மனங்கள் இணையும் போது பிரிவினைக்கு தீர்வு கிட்டும்
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில் தெரிவித்தார். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று, நான்கு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். இந்த நெடுஞ்சாலை வடக்கும், கொழும்பும் ஒன்றிணைவதற்கும் அவற்றுக்கிடையிலான பயணத்தூரம் சுருங்குவதற்கும் வழிவகுக்கும். அப்போது பிரிவினை என்ற சிந்தனையே எழாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நவீன பாதைகள் அமைக்கப்பட்டு பிரதேசங்களுக்கான எல்லைகள் சுருக்கப்படும் போது நாட்டில் பிரிவினை வாதமும் பிரதேச வாதமும் இல்லாதொழியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பாதை நவீனமயப்படுத்தப்பட்டு மூன்று மணித்தியாலமாகப் பயணம் சுருங்கும் போது எல்லைகள் என்பதற்கே இடமில்லை.
இடைவெளிகள் குறைந்து மனங்கள் இணையும் போது பிரிவினைக்குத் தீர்வு இயல்பாகவே கிட்டிவிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க விந்தையின் நுழைவாயிலாக இருக்கும் கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து காலி கரந்தெனியவில் நடைபெற்ற மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி. எம். ஜயரட்ன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சர்கள், ராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், நவீன உலகிற்கு இலங்கையை அறிமுகப்படுத்தும் சிறந்த வாயிலாக தென்னிலங்கைக்கான அதிவேக நெடுஞ்சாலை அமையுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பிரதமர் ஒருவருக்குக் கூட ‘ஏ9’ பாதையில் புலிகளின் அனுமதியின்றி பிரவேசிக்க முடியாதிருந்த யுகத்தை மாற்றி இன்று எவரும் சுதந்திரமாக பயணிக்கக் கூடிய அதிவேக நெடுஞ் சாலையை அமைக்க வழிவகுத்துள்ளோம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, சுபீட்சமான எதிர்காலத்தில் வெற்றிகரமாகப் பயணிப் பதற்கு புதிய தலைமுறையினர் தம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம் எனத் தெரிவித்தார். நவீன நாடு, வளர்ச்சி யடைந்த மக்கள் என பேசுகின்றோம். நமது நாடு அத்தகைய வளர்ச்சிப் போக் கில் பயணிக்கிறது என்பதற்கு இந்த அதிவேக நெடுஞ்சாலை சிறந்த உதாரணம்.
நாம் நல்ல நோக்கோடு செயற்படுகின் றோம். அதனால் அதன் பிரதிபலனை முழு நாடும் அனுபவிக்கும். இதன் ஆரம்பப் படியே இதுவாகும்.
நாட்டின் பிரதமராக ஒரு வீதியில் பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது நான் அந்த நிலையை மாற்றுவதற்கு உறுதி பூண்டேன். நாட்டு மக்கள் கனவு காணும் காலம் கடந்துவிட்டது. இது கனவுகள் நனவாகும் காலம்.
எமது இளைய தலை முறையினர் ஏனைய நாடுகளைப் பார்த்து இனி ஏங்க வேண்டிய அவசியமில்லை. இலங்கையும் நவீன நாடாக மாறிக் கொண்டிருக்கிறது.
நாட்டில் அபிவிருத்தி நடைபெறுகிறது. சகல கிராமங்களும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. நகரத்தைப் போன்றே தொழில்நுட்ப அறிவில் கிராமத்தையும் முன்னேற்றும் செயற் திட்டம் நடைபெறு கிறது. நாட்டில் வறுமை முற்றாக ஒழிக்கப்படவில்லை.
எனினும் விரைவில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும். சுதந்திரத்தின் பின்னரான நாட்டின் வரலாற்றில் முத லாவது விமான நிலையம் மத்தளையில் நிர்மாணிக்கப்படுகிறது. இது தெற்கை தேசிய உற்பத்தியின் கேந்திரமாகவும், உல்லாசத்துறையின் கேந்திர நிலையமாகவும் மாற்றுவது உறுதி. நாட்டின் முன்னெடுக் கப்படும் சிறப்பான செயற்றிட்டங்களால் உற்பத்தித்துறையைப் போன்றே உல் லாசத்துறையும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த வருடத்தில் 7,50,000 உல் லாசப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள் ளமை இதற்கு சிறந்த உதாரணம்.
நவீன இலங்கையை நாம் கட்டி யெழுப்புவோம் என்ற வாக்குறுதி தற் போது நிறைவேறுகிறது. எமது வம்ச வரலாற்று ஏட்டின் புதிய அத்தியாயம் இந்த நெடுஞ்சாலை மூலம் புரட்டப் பட்டுள்ளது. இன்று போல் ஒரு 27 ம் திகதி நாட்டு மக்கள் மறக்க முடியாதது. மாவீரர்கள் தினத்துக்காக இன்றைய தினம் ஒதுக்கப்பட்டு அதற்குப் பயந்து வாழ்ந்த யுகம் அது.
எமது பிள்ளைகளை ஒரு வாரத்திற்கு பாடசாலைக்கு அனுப்ப முடியாது நாம் கவலைப்பட்டோம். அன்று வானொலிகள் மூலம் கூட இதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது. இன்று அந்த யுகம் மாற்றமடைந்துள்ளது. அண்மைக் காலமாக நாம் மேற்கொண்ட சிறந்த வெற்றிகரமான செயற்பாடுகளுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைக் குறிப்பிட முடியும். நாட்டில் காணியின் விலை உயர்ந்து செல்கிறது என்றால் அது தாய் நாட்டின் பெறுமதி உயர்கிறது என்பதே பொருள்.
கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையோடு கட்டுநாயக்கா - கொழும்பு, கண்டி - கொழும்பு, திரு கோணமலை - கொழும்பு, யாழ்ப்பாணம் - கொழும்பு என சகல நெடுஞ்சாலைகளும் நவீனமயப்படுத்தப்படும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்ல 8 மணித்தியாலம் செலவாவதால் தான் பிரிவினை கோருகின்றனர். நவீன பாதை மூலம் 3 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்ல முடியுமானால் பிரிவினை தேவையில்லை. அப்போது எல்லைகளும் இருக்காது. நாட்டு மக்க ளின் மனங்களும் இணைக்கப்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடும். பிரிவினை வாதம், பிரதேச வாதத்திற்கு சிறந்த தீர்வு இதுவே எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் பல வீதிகள் பெருந்தொகை நிதி செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 2012 ஆம் ஆண்டுக்காக 78 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment