எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது
பிரிட்டனின் கருத்தை அரசு நிராகரித்தது
* வெளிநாடுகளை திருப்திப்படுத்த கொள்கை தயாரிக்க முடியாது
*இலங்கை இறைமையுள்ள நாடு: எவரும் ஆட்டிப்படைக்க முடியாது
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது.
எந்த நாடும் எமக்கு உத்தரவிட முடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது, வேறு நாடுகளை திருப்தி படுத்துவதற்காக எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது. இலங்கை காலனித்துவ நாடல்ல. இது சுயாதீனமான இறைமை யுள்ள நாடு. எமக்கு எந்த நாடும் உத்தர விட முடியாது. காலக்கெடு விதிக்கவும் முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க மாட்டோம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம் என்றார். பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கினார்.
இந்த மாநாட்டில் இலங்கைக்கு பாரிய வெற்றிகள் கிடைத்தன. இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்ப்பு இருப்பதாக காண்பிக்க சர்வதேச ஊடகங்கள் முயற்சி செய்தன. ஆனால் இதற்கு மாற்றமானதே நிகழ்ந்தது. இந்த மாநாட்டில் இலங்கைக்கும் மூன்று பிரதான ராஜதந்திர வெற்றிகள் கிடைத்தன.
2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கனடா கூட இலங்கையில் மாநாட்டை நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேச கனடா வெளியுறவு அமைச்சர் முயன்றார். இதனை நான் முழுமையாக எதிர்த்தேன். இது பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு முரணானது எனவும் எந்த நாட்டுடனும் எமது நாட்டு பிரச்சினை குறித்து பேச தயார் எனவும் தெரிவித்தேன்.
இதனையடுத்து 15 நாடுகள் தலையிட்டு எனது உரைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. இது தவிர ஜனாதிபதி பேர்த் வருவதற்கு தயாரான போது புலிகளுக்கு சார்பான ஒருவரினால் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு தடவைகள் மக்களினால் தெரிவான ஜனாதிபதியை அவுஸ்திரேலியா நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதை நாம் விளக்கினோம். இதனையடுத்து வழக்கு தொடர்வதை பெடரல் சட்டமா அதிபர் நிராகரித்தார்.
மனித உரிமை தொடர்பில் ஆராய ஆணையாளர் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் 90 வீதத்திற்கும் அதிகமான நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது. இது பொதுநலவாய அமைப்பை அரசியல் மயமாக்கும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை அநேக நாடுகள் ஏற்றன. மீண்டும் ஆணையாளர் ஒருவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காது. பொதுநலவாய அமைப்பில் சுயாதீனமான நாடுகளே உள்ளன. வேறு நாடுகள் தமது உள்விவகாரத்தில் தலையிடுவதை எந்த நாடும் அனுமதிக்காது என்றார்.
0 commentaires :
Post a Comment