லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாஃபியின் மகன் சய்ஃப் அல்-இஸ்லாம் அந்நாட்டின் தென்மேற்கே உள்ள பாலைவன நகரான உபாரியில் கிளர்ச்சிப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதின் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேசிய சய்ஃப் அல்-இஸ்லாம் தான் பத்திரமாக இருப்ப்பதாக கூறியுள்ளார்.
ஒரு மாதத்துக்கு முன்னர் நேட்டோ வான் தாக்குதலில் சிக்கி இந்தக் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.தற்போது வெளியாகியுள்ள நிழற்படமொன்றில் சய்ஃப் அல்-இஸ்லாமின் கைகளில் காயக்கட்டுக்கள் காணப்படுகின்றன.
அவரது சகோதரர்களில் ஒருவர் இப்போது தஞ்சமடைந்திருக்கின்ற, அண்டையிலுள்ள நிஜர் நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த போது இவர் கைது செய்யப்பட்டதாக லிபியாவின் இடைக்கால நிர்வாகம் கூறியுள்ளது.
சய்ஃப் அல்-இஸ்லாம் எனக் காட்டும் நிழற்படங்களையும் லிபியத் தொலைக்காட்சி காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த செய்தி கேட்டு திரிப்போலியின் வீதிகளில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
முன்னாள் லிபியத் தலைவர் கேர்ணல் முவம்மர் கடாஃபிக்குப் பின்னர் அவரது வாரிசாக ஆட்சியைப் பொறுப்பேற்பார் என்று ஒருகாலத்தில் நம்பப்பட்டவர் தான் இந்த சய்ஃப் அல்-இஸ்லாம்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய கிளர்ச்சிக்கு முன்னர் வரை, மேற்குலக கல்வி கற்ற, ஆங்கிலம் பேசக்கூடிய இவரை, லிபியாவின் சீர்திருத்த முகமாகத்தான் சிலர் பார்த்திருந்தனர்.
39 வயதான, ஒரு பொறியியலாரான சயிஃப் அல் இஸ்லாம், கடாஃபியின் அணு ஆயுதத்திட்டத்தை கைவிடச் செய்த பேச்சுவார்த்தைகளிலும் அதன்பின்னர், லிபிய மருத்துவமனையொன்றில் சிறார்களுக்கு எச்.ஐ.வி கிருமிகளைத் தொற்றச் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பல்கேரி்ய மருத்துவர்கள் ஆறுபேரின் விடுதலைக்கான பேச்சுக்களிலும் முக்கிய பங்குவகித்திருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை
ஆனால், லிபிய கிளர்ச்சியின் பின்னர் சய்ஃப் அல்-இஸ்லாம் மீதான மேற்குலகின் பார்வை வேறுவிதமாக படியத்தொடங்கி விட்டது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இறுதிவரைப் போராடப் போவதாக ஆத்திரம் பொங்க சூளுரைத்திருந்த இவர், கிளர்ச்சியாளர்களை குடிகாரர்கள் என்றும் காடையர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கூட வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதமளவில் நேட்டோ தனது தாக்குதலை தொடங்கலாமா இல்லையா என்று ஆலோசித்துக்கொண்டிருந்த போது, எல்லா பகைகளையும் தம்மால் முறியடித்துவிடமுடியும் என்று சய்ஃப் அல்-இஸ்லாம் முழங்கினார்.
ஒரு கட்டத்தில் சய்ஃப் அல்-இஸ்லாமை பிடித்துவிட்டோம் என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
ஆனால் மறுகணமே, திரிப்போலியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே தோன்றிய அவர், அந்த நிலையிலும் வெற்றி நமதே என்று நம்பிக்கையோடு கோசமிட்டுவிட்டுச் சென்றிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அவர் தலைமறைவாகிப் போனார்.
கடந்த மாதம் கர்ணல் கடாஃபி பிடிபட்டு கொல்லப்பட்டுவிட்ட நிலையில் சய்ஃப் அல்-இஸ்லாம் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமலேயே இருந்தது.
சய்ஃப் அல்-இஸ்லாம் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஜூனிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment