ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினம் இன்றாகும். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளையாகும். இதனையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன.
பயங்கரவாதத்தை ஒழித்து முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் தலைவர் என்ற வகையில் உலகத் தலைவர்களும் நாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சமய வழிபாடுகள், கலாசார நிகழ்ச்சிகள், தானம் வழங்கும் வைபவங்கள் ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஆசீர் வேண்டி விசேட பூஜைகளும் இன்று நடைபெறுகின்றன.
இன்று காலை களனி விஹாரையில் விசேட மத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அதனையடுத்து முற்பகல் 10.00 மணிக்கு அலரி மாளிகையில் நவம்பர் 18 ஆம் திகதியில் பிறந்த பிள்ளைகள் ஆயிரம் பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளைகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவார்.
இன்று மாலை கொழும்பு கோட்டை யிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சமய வழிபாடுகள் இடம்பெறுவதுடன் நாட்டின் பல பதிகளிலும் சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை 19 ஆம் திகதி கொழும்பு கங்காராம விஹாரையிலிருந்து அலங்கார ஊர்வலமாக பெளத்த மதத் தேரர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு சமய வழிபாடு கள் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராம விஹாரையில் ஆயிரம் தாய்மாருக்கு தானம் வழங்கும் வைபவங்கள் இடம்பெற்றன. அத்துடன் நேற்றுப் பிற்பகல் நாடளாவிய 66 பாடசாலை மாணவர்களுக்கு கணனிகளும் கல்வி உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொண்டார். இதேவேளை, இன்றும் நாளையும் நாட்டின் சர்வ மத வழிபாட்டுத் தலங்களிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
அனுராதபுரம் மகாபோதி, கண்டி தலதா மாளிகை, களனி மகா விஹாரை, பெல்லன்வில ரஜ மகா விகாரை, களுத்துறை மற்றும் மாத்தறை மகா போதி, திஸ்ஸ மஹாராம ராஜ மகா விஹாரை, மஹியங்கன ரஜமஹா விகாரை வவுனியா சுதர்மாராம, மட்டக்களப்பு மங்களாராமய ஆகிய விஹாரைகளிலும் சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை, மன்னார் திருக்கேதீஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம் மாவிட்டபுரம் தேவஸ்தானங்களிலும் இந்து மதவழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற வுள்ளன. அத்துடன் கொழும்பில் ஸ்ரீமயூராபதி தேவஸ்தானம், காலிமுகத்திடல் கிறிஸ்து நாதா ஆலயம், தெவட்டகஹ பள்ளிவாசலிலும் சமய வழிபாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு ள்ளன.
நேற்று முன்தினம் 11 இலட்சம் மரக் கன்றுகளை நடும் தேசிய வைபவம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன், கதிர்காமம் கிரிவெஹெர ரஜமகா விஹாரையில் நிர்மாணிக்கப்படும் நூதனசாலைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப் பட்டது.
அதன் பின்னர் கிரிவெஹெர விஹாரையில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்டார். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் எந்தப் பகுதிக்கும் எவரும் எந்நேரத்திலும் சென்று வரக்கூடிய சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளார் என ஜனாதிபதியை அவரது பிறந்த நாளில் வாழ்த்தும் நாட்டு மக்கள் அவர் நீடூழி வாழவேண்டும் எனத் தனிப்பட்ட ரீதியிலும் வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment